ஹரன் ஐயாவுக்கு அஞ்சலி


பாடமாய்க் கண்ட உன்னைப்
    படமாகக் காண்ப தற்கா
நாடெலாம் சுற்றி நானும்
    நாடினேன் நின்றன் நட்பை?
ஏடெலாம் வழங்கா ஞானம்
    எழுதினாய் இதயத் துள்ளே
பாடுவேன் உனக்கோர் பாடல்
    பகருவேன் நெஞ்சை அங்கே!


மனமெலாம் தேசத் தின்மேல்
    மட்டுமே வைத்தாய் நாளும்
வினையெலாம் அதற்கே செய்து
    விதியெனக் கலந்து விட்டாய்
முனைப்புடன் உனக்கு நீயே
    முடைந்தவோர் பாதை இங்கே
எனக்கென விட்டாய் போலும்
    எடுக்கிறேன் நடையை நானும்

நீசொலும் வாச கங்கள்
    நீசெயும் காரி யங்கள்
வாசமாய் நெஞ்சத் துள்ளே
    வாழ்க்கையில் கலந்து நிற்கத்
தேசமே தெய்வம் என்னும்
    தெளிவிலே புறபட் டேன்யான்
மாசிலா வண்ணம் காத்து
    மனத்திலே மகிழ்வாய் ஐயா!

அறத்தினைக் காத்தல் செய்வேன்
    அஞ்சுதல் விட்டொ ழித்தேன்
மறத்தினை மனத்தில் ஏற்றேன்
    வழித்துணை ஆகி என்றன்
திறத்தினால் பார தத்தாய்
    திருப்பதம் போற்றிக் காக்கும்
சிறப்பினை நல்கி யென்றன்
    தினத்திலே நிறைந்தி ருப்பாய்

ஹரனெனும் ஐயா உன்போல்
    அடுத்தினி யாரெ மக்கு?
வரமெனத் தந்த தெய்வம்
    வழங்கிய தெடுத்துக் கொள்ள
மரணமாம் தூத னுப்பி
    மண்ணிலே வீழ வைத்தான்
நரவுடல் வீழும், செய்த
    நன்மைகள் வாழும் நின்றே!!

-விவேக்பாரதி
19.07.2018

Popular Posts