ஆத்தா வரும் ஆடி

ஆடி மாச வெள்ளியிலே
ஆத்தா வரா வாசலிலே
அலங்காரத் தீபம் ஏந்தி
ஆரத்தியக் காட்டுவோம்
அவளாலே நாமிருக்கும்
ஆனந்தத்தப் பாடுவோம்! 


கோலாகலப் பந்தலுல
கொழந்த போல அவ வரா!
கொட்டுச் சத்தம் கூடவர
கொலுவிருக்க அவ வரா!
நாலாபக்கம் வேதச்சத்தம்
நடுவுலதான் அவ வரா
நாம படும் துன்பங்கள
நசுக்கிடத்தான் அவ வரா!

ஆடி மாச வெள்ளியிலே

தங்கக் கொலுசு பாதத்துல
தகிடததிமி சொல்லுது
தமிழறிஞ்ச புலவருக்குத்
தத்தகாரம் சொல்லுது
அங்கமெல்லாம் கருப்புப் பூச்சு
ஆரத்திபோல் குங்குமம்
ஆத்தா நடந்து வரும் நேரம்
அகிலமெல்லாம் மங்கலம்!

ஆடி மாச வெள்ளியிலே

சொடுக்குப் போடும் நேரத்துல
சொர்க்கம் நரகம் காட்டுவா!
சொகுசுங் காட்டி சோகங் காட்டி
சோதனையில வாட்டுவா!
அடுக்குமல்லி பல்வரிச
அதிரச் சிரிக்கும் முத்துதான்
ஆடிப்பாடும் ஏழைக்கிவ
அழியாத சொத்துதான்!

ஆடி மாச வெள்ளியிலே

ஆத்தா வரா வாசலிலே
அலங்காரத் தீபம் ஏந்தி
ஆரத்தியக் காட்டுவோம்
அவளாலே நாமிருக்கும்
ஆனந்தத்தப் பாடுவோம்!!

-விவேக்பாரதி
20.07.2018


பாடல்

Popular Posts