புழுக்கம்


மலரைக் கூட புசிக்கும் ஓநாய்
    மயக்கம் வாழும் காலம்
மனத்தில் முழுதும் குப்பை நிரப்பி
    மறைத்து வேஷம் கோலம்
உலகில் இனிமேல் எதுதான் மிஞ்சும்
    உண்மை நேர்மை செத்தால்?
உணர்வுக் குள்ளே கனல்வர வேண்டும்
    உயர்வாய் பெண்ணே வித்தாய்!


ஆணே ஆணே பெண்ணழு கின்றாள்
    அசிங்கம் நமக்கென் றறிவாய்
ஆண்டவன் படைத்த கண்களி லொன்று
    அழிவதைக் எண்ணிக் குணிவாய்
வீணே தைரியம் அவரிடம் சொல்லி!
    விட்டொழிப் பாயுன் காமம்
விளையாட் டல்ல வாழ்க்கை என்பது
    வினைகள் செய்யும் யாகம்!

உன்னைப் பேயாய்ப் பார்ப்பது கண்டும்
    உணர்ச்சி இல்லா நெஞ்சா?
உறுதுணை யாக இருக்க விலையேல்,
    உனக்கேன் ஆண்மை? நஞ்சாய்!
பெண்ணைக் காணும் போதுன் கண்ணில்
    பேணுக உண்மை ஒழுக்கம்
பேடித் தனங்கள் மறைந்தால் நம்மைப்
    பிரியும் இந்தப் புழுக்கம்!!

-விவேக்பாரதி
18.07.2018

Popular Posts