தமிழ்த் தேவன்

நட்டநடு கோவிலில் சூரியனைப் போலவும்
வட்டமிடும் அடியவர்கள் வளக்கோள்கள் போலவும்
இட்டமுடை தேவியவள் இடபாகம் வாழவே
கொட்டமடிக் கின்றவென் கோமகனே வாழிநீ! 


கங்கைசடைத் தலையாறு காதணிகள் சங்குகள்
மங்கையுடல் ஒருபாதி மார்பிலொரு பாம்பணி
பொங்குகுளிர் வெண்ணிலவு பொறைமிகுந்த இருவிழி
தங்குகிற தலையான தமிழ்த்தேவ வாழிநீ!

வெள்ளிமலை உன்வீடு வேண்டுபவர் நெஞ்செனும்
உள்ளமலை யும்வீடாய் உயிருருகப் பாடிடும்
பள்ளுமலை யுன்வீடாய்ப் பார்க்கின்ற திசையெலாம்
கொள்ளையிருள் கூடிவிடக் கூத்திடுவாய் வாழிநீ!

தெருவிலழும் பிள்ளைநான் தேற்றியெனை மாற்றினாய்
உருவிழந்த பொம்மைநான் உன்னுருவை ஊற்றினாய்
கருவிலெழும் ஆசைகளும் கவலைகளும் மாயவே
அருளைப்பொழி ஆண்டவனே அரதேவ வாழிநீ!

நீயாக நானாக நிஜமென்ன சொல்லிடு
தீயாக நெஞ்சுக்குள் தினமேறி நடமிடு
வாயார உன்வாழ்க்கை வழக்காடச் சொல்கொடு
நேயாதி நேயனேஎன் நிர்மலனே வாழிநீ!!

-விவேக்பாரதி
11.07.2018

Comments

Popular Posts