வசந்த வாசல்

வசந்தம் என்னும் வாசலிலே
வரவேற் பில்லாச் சிறுகுழந்தை - என்
அசதியிலே நான் பாடுவதெல்லாம்
அகமொழி யாகும் புதுமழலை! 


நான்
விண்ணில் விரிந்து விதையில் ஒளிந்து
விருட்ச மாகும் அதிசயம் - பல
வினையெல் லாமென் விரல்களுக் குள்ளதன்
விந்தை காண்ப தவசியம் - என்
கண்ணுக் குள்ளே ககனத் துளியைக்
கண்டு கண்டு ரசிப்பவன் - அக்
காட்சியி லேயொரு துளியைக் கிள்ளிக்
காதில் கவிதை படிப்பவன்!

ஒரு
கணத்தில் தொடங்கி கணத்தில் முடியும்
கணக்கு மறியா வாழ்க்கையில் - இதைக்
கணிப்ப தெவனோ நடிப்ப தவனே
காட்சிகள் மட்டும் சேர்க்கையில் - நம்
மனத்துத் திரையில் மலைகள் கவிழும்
மலரும் விரியும் உண்மைதான் - இம்
மரும மறிந்தால் மரித்து விழினும்
மண்ணில் வாழ்வ துறுதிதான்!

புவி
எடுத்த பிறப்பில் எதற்கு பயணம்?
எதனை நோக்கி நகர்கிறோம்? - இதில்
இடையில் உறவு இடியாய்ப் பிரிவு
இடத்தை மட்டும் பகிர்கிறோம் - இறை
கொடுத்த உயிர்க்குள் கோடிய ணுக்குள்
குடியி ருப்பதும் தெய்வமே - தன்
குணத்தில் மனிதன் உயர்வான் தாழ்வான்
குலத்தில் இல்லை பாவமே!

-விவேக்பாரதி
19.07.2018

Popular Posts