மூர்த்தியவன் யானை முகன் - நடுவெழுத்தலங்காரம்

"சந்தவசந்தம்" கூகுள் குழுமத்தில் கவிமாமணி இலந்தையாரின் நெறிகாட்டலில் கவிஞர் குருநாதன் ரமணி அவர்கள் தலைமையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது மிறைப்பா கவியரங்கம். அதில் அடியேன் பதிந்த கவிதைகளும் ஒன்று. நடுவெழுத்தலங்காரம் என்பது செய்யுளில் சொல்லப்படும் சொற்களின் வேறுபெயர்களை எடுத்துக்கொண்டு அவற்றின் நடுவெழுத்துகளைக் கோத்துப் படித்தால் வேறுபெயர் வருவது. அப்படி ஒரு நடுவெழுத்தலங்காரத்தில் காப்புச் செய்யுள் இயற்றினேன்.

நோயிலும் சிந்தனையின் நோக்கிலும் விண்ணிருந்து
பாயும் மழையிலும் பாரிலும் - நாயுணர்த்தும்
நேர்த்திமிகு பண்பிலும் நேயத்தோ டேகாப்பான்
மூர்த்தியவன் யானை முகன்!

பொருள்:

நோய் வரும்போதும், சிந்தனையில் நோக்கில் இருந்தும், விண்ணிலிருந்து பாயும் மழையாகவும், பாரிலும், நாய் உணர்த்தும் நன்றி என்னும் நேர்த்திமிகு பண்பினை உணர்த்தி நம்மை நேயத்துடன் காக்கும் மூர்த்தி தான் யானை முகன்.

நடுவெழுத்து:

நோய் - வியாதி - யா
சிந்தனையின் நோக்கு - நினைவு - னை
விண்ணிருந்து பாயும் மழை - அமுது - மு
பார் - செகம் -
நாயுரைக்கும் நேர்த்திமிகு பண்பு - நன்றி - ன்

"யானைமுகன்"

-விவேக்பாரதி
01.07.2018

Popular Posts