எத்தனை காலம்?

மாங்காட்டுக் காமாட்சி அம்மன் கோவிலில் பாடிய பாடல்..... 

எத்தனை காலம் காத்திருப்பேன்? அடி
    என்னருந் தாயே பதிலுரைப்பாய்!
பித்தனைப் போலிங்கு பாடுகிறேன் உன்றன்
    பீடு முகங்காண ஏங்குகிறேன்!

சித்தனைப் போலென்னைச் செய்திடம்மா! வந்து
    ஜீவனுக்குள் ஒளி பெய்திடம்மா!
எத்தனை காலம் காத்திருப்பேன்? அம்மா
    என்துயர் தீரும் வழியுரைப்பாய்!

குங்கும வாசம் கொஞ்சிவரும்! உன்னைக்
    கும்பிடும் மனங்கள் கோடிவரும்!
மங்கள வாத்தியம் மகிழ்ந்திருக்கும்! என்றன்
    மனமெங்கும் உன்முகம் நிறைந்திருக்கும்!

அங்கத்தில் மஞ்சள் சிரித்திருக்கும்! எங்கும்
    அன்பெனும் அரசு விரிந்திருக்கும்!
திங்களைப் போல்முகம் ஜொலித்திருக்கும்! கண்டால்
    திரண்டிடும் அச்சம் விழுந்திருக்கும்!

-விவேக்பாரதி
 

Popular Posts