நீயில்லாப் பொழுதுகள்

நீயும் இல்லாப் பொழுதுகளில்
    நெஞ்சத் திற்குள் இடிமுழக்கம்
தீயும் குளிரும் சேர்ந்து மூளத்
    திணறும் படிக்கு மனநடுக்கம்!


நீயும் இல்லாப் பொழுதுகளில்
    நிலவும் வெம்மைக் கதிர்சுமக்கும்
வாயும் மௌன வசந்தம் தொலைத்து
    வாடும் வரையில் கவிபடிக்கும்!

விரகம் தாபம் மோகமெலாம்
    விரல்கள் நீட்டிப் பரிகசிக்கும்
நரகம் இந்த நகரம் ஆகி
    நலனை எல்லாம் உடனழிக்கும்

நெஞ்சுக் குள்ளே புயலடிக்கும்
    நெருப்பு விழிகள் நீருகுக்கும்
நஞ்சை உமிழும் நச்சர வம்தன்
    நாவால் தீண்டி நின்றிருக்கும்

புல்லாங் குழலின் இசைகசக்கும்
    புரியாப் பாரம் நெஞ்சடைக்கும்
சொல்லால் சொல்ல முடியாத் துயர்கள்
    சொக்க வைத்துச் சோர்வடிக்கும்

சபலக் கண்கள் வட்டமிடும்
    சஞ்ச லங்கள் தீமூட்டும்
அபயம் அபயம் எனவென் காதல்
    அடிக்க டிக்குக் குரல்கொடுக்கும்

இனம்புரி யாத தாகங்கள்
    இதயம் எங்கும் ஏக்கங்கள்
மனம்புரி யாமல் கதறிக் கொண்டே
    மடியைத் தேடும் நேரங்கள்

அழுகை வீழ்ச்சி ஆழ்துயரம்
    அரிவாள் பிரிவால் துர்மரணம்
தொழுகை துக்கம் சோம்பல் ஏக்கம்
    தோற்றுப் போன மனவுணர்ச்சி

எல்லாம் வந்து மூழ்கடிக்கும்
    ஏவு கணைகள் உள்வெடிக்கும்
இல்லா மல்நீ பிரியும் நேரம்
    இப்படி எல்லாம் போர்நடக்கும்!!

-விவேக்பாரதி
31.07.2018

பிரபலமான பதிவுகள்