வடிவாய்க் கவிசெய்வோம் வா!

 No automatic alt text available.

வானங் கருத்துதரும், வற்றாத சந்தத்தை
ஞானக் குயிலும் நமக்களிக்கும், - தேனைக்
குடித்த கரடி குதித்தல்போல் துள்ளி
வடிவாய்க் கவிசெய்வோம் வா! 


ஆற்றல் மனத்துவசம், ஆக்கம் கரத்துவசம்,
ஏற்றம் நினைப்புவசம் ஏறிவா! - காற்றைப்
பிடித்து வரிக்குள் பிதுக்க அடைத்து
வடிவாய்க் கவிசெய்வோம் வா!

நாட்டுநிலை மாறி நலமோங்க, நம்முடைய
வீட்டுநிலை கூட வியப்பாகக், - கூட்டும்
படையாகச் சொற்கள் பலம்சேர்க்க நாமும்
வடிவாய்க் கவிசெய்வோம் வா

இயற்கை இசைதரும் இன்பம், மனத்தை
மயக்கும் அதுபெரும் மாயம்! - நயந்து
தடையின்றி வானுக்குத் தாவிக் குதித்து
வடிவாய்க் கவிசெய்வோம் வா!

வண்ணக் கடல்காண, வாடா மலர்காண,
எண்ணம்போல் காட்சி எழிலாகத் - உண்மை
உடையாத காலம் உருவாகச் சேர்ந்து
வடிவாய்க் கவிசெய்வோம் வா!!

-விவேக்பாரதி
30.08.2018

Popular Posts