சுண்டுவிரல் மை

மண்ணுக்குள் கிடைக்காத வைரம்! அண்ட
    மன்றத்தில் மின்னாத வைரம்! நூறு
வண்ணத்தில் ஒளிகூட்டும் வைரம்! யார்க்கும்
    மனமென்னும் கண்காட்டும் வைரம்! கேட்கும்
பண்ணென்றும் காண்கின்ற சொற்கள் என்றும்
    பல்லுருவ ஜொலிப்புகளைத் தாங்கும் வைரம்
எண்ணத்துக் குகைச்சுவரில் எழுந்த வைரம்
    எழுத்துக்கள் வைரம்!என் கவிதை வைரம்!


விலையில்லை இதைவாங்க! என்ற போதும்
    விளையாடும் நெஞ்சிருந்தால் தந்து செல்க
நிலையாக அடுத்தகணம் உங்கள் வீட்டை
    நிச்சயமாய் அலங்கரிக்கும் என்றன் வைரம்!
உலையில்லை இதைவெட்டச் செவிக ளுக்குள்
    உள்வாங்கிக் கொள்ளுங்கள் அங்கே பின்னர்
கலையெல்லாம் நடந்தேறும் தடுத்தால் கூடக்
    காப்பாற்ற முடியாது கரைந்து போக....

வைரத்தில் ஒருமின்னல் நெஞ்சைக் கீறி
    வளமாக இடங்காணும் அமர்ந்து கொள்ளும்,
ஓரத்தின் ஒருமின்னல் உள்ளே மன்னும்
    இருட்டுக்கும் ஒளியூட்டி கண் திறக்கும்,
சாரத்துக் கொருமின்னல் அதுதான் நம்மை
    சத்தியமாய்ச் சொன்னபடி ஆட்டி வைக்கும்,
ஈரத்துக் கொருமின்னல் அதுதான் தன்னை
    இதயத்தின் அரியனையில் நிலைக்க வைக்கும்!

வியாபாரி நானப்பா வாங்க வந்தால்
    விலையாக நீரப்பா! கூவல் இன்றி
தியானத்தால் பாட்டாலென் விற்கும் உத்தி
    சாதகந்தான் அதில்வீழ்வோர் நிறைய உண்டு!
வியாக்யானம் உரைச்சொற்கள் ஏது மின்றி
    வெறுந்தூய கவிதைகள் என்றன் வைரம்!
சுயேட்சைகள் என்வைரம்! உடனே உங்கள்
    சுண்டுவிரல் பார்ப்பீர்என் பேனா மையை!!

-விவேக்பாரதி
14.08.2018

Popular Posts