எழுது

எழுது!

நீல வானம் வெகுநாட்கள்
காலியாகவே இருப்பதா?
எழுது!

கடலில் மைநிறம்
வற்றாமல் கிடப்பதா?
எழுது!

மனத்தில் எண்ணங்கள்
மண்டியிட்டுத் தவிப்பதா?
எழுது!

இதயம்
வெறும் துடிக்கும் சதையாகவே
இருந்து மடிவதா?
எழுது!

சிந்திக்கத் தெரிந்தும்
சிறகுகள் இருந்தும்
பறக்காமல் இருப்பதா?
எழுது!

உன் எழுத்து
நட்சத்திரப் புள்ளிகளைக் கோத்த
நகர்வரிசையாக இருக்கட்டும்!
அவல ஆனந்தம் பார்க்கும்
ஆடியாக இருக்கட்டும்!

நீ மானுடன் என்பதன்
மகத்துவம் விளங்கட்டும்!
சில விரல்களில் புணர்வில்
விசைகள் பிறக்கட்டும்
எழுது!

தாளும் கோலும் உராய்வதில்
தங்கத் தீ கிளம்பட்டும்,
தூய்மைக்குப் பொருளாக
அந்தத் தீ விளங்கட்டும்,

உன் தேகம் உலகத்தில்
எழுத்துருவில் வாழட்டும்,
வரலாற்றின் உயிர்வேர்கள்
உன் தாகம் பருகட்டும்!
எழுது!

"ஏனெழுத வேண்டும்?"
என்பவன் மானுடன்!
"என்ன எழுத வேண்டும்?"
என்பவன் போராளி
"எத்தனை எழுத வேண்டும்?"
என்பவன் தலைவன்....
எழுது...

-விவேக்பாரதி
31.07.2018

Popular Posts