அவர்தான் பாரதி சுராஜ்

Image may contain: 1 person

பாரதி அன்பர் பைந்தமிழ்ச் செல்வர்
    பக்குவ மாகப் பேசிடும் நெஞ்சர்
தாரக மாகக் கண்ணனின் நாமம்
    தன்னுடை நெஞ்சில் முழங்கிடும் பண்பர்!
சூரிய னாகத் தனியொரு வீதி
    சமைத்துப் பாரதி புகழை வளர்த்தார்
நேரிய சிந்தனை நேரிய பேச்சு
    நினைவில் அவர்க்குத் தமிழே மூச்சு


அவர்தான் பாரதி சுராஜையா
அவரைப் போலினி யாரையா?

தள்ளா வயதினும் தமிழுக் காக
    தரமுயர் மன்றம் நிதமும் நிகழ்த்தித்
தள்ளா ததனை முன்னிருந் தூக்கித்
    தகுந்த அறிவுரை பின்னால் பேசிக்
கள்ளாய்க் கவிதை கிடைத்தால் சொக்கிக்
    கண்ணில் ஒற்றி கரமழை பொழிந்து
துள்ளும் உள்ளம் துவழா இளமைத்
    தோற்றம் நமக்கும் ஏற்றம் அவரே

அவர்தான் பாரதி சுராஜையா
அவரைப் போலினி யாரையா?

அழகிய திருமண் அகத்தில் பாரதி
    ஆன்ற புலமை அதனுடன் ஹாஸ்யம்
பழகிட இனிமை பக்குவப் பேச்சு
    பாட்டைக் கேட்டுக் குழையும் குழந்தை
முழுதும் தமிழின் முதுமைத் தேனில்
    மூழ்கிய தங்கம் முனைப்பினில் சிங்கம்
எழுத்தும் பேச்சும் வாழ்க்கை என்றே
    எழிலாய் வாழ்ந்த அரசரின் பிம்பம்

அவர்தான் பாரதி சுராஜையா
அவரைப் போலினி யாரையா?

நடந்தோம் அவரின் வழிபற்றி
    நடப்போம் அவரின் தடமொட்டி
கடந்தோம் அவர்பின் கைகட்டி
    கடப்போம் அவர்போல் கைகட்டி
உடல்தான் உலகை பிரிந்துசெலும்
    உள்ளம் உணர்வு கூடவரும்
அடடா வென்பார் கவிகேட்டு
    அவர்போல் வாழ்வோம் விதிபோட்டு!!

அவர்தான் பாரதி சுராஜையா
அவரைப் போலினி யாரையா?

-விவேக்பாரதி
25.08.2018

Comments

பிரபலமான பதிவுகள்