மலையாள நாடு


மலையாள நாடு, எங்கள்
மனம் கொள்ளும் நாடு
மழையோடும் தென்றலோடும்
உயிர்வாழும் நாடு
கலையாத நம்பிக்கைகள்
கருவாகும் நாடு
கார்மேகம் தஞ்சங்கொண்டு
விளையாடும் நாடு! 


எங்களூர்ப் பெண்டுகளெல்லாம்
கிள்ளைகளோடு விளையாடும்
எங்கள் ஊர் ஆண்மகவெல்லாம்
புலியின் கூட்டத் துறவாகும்!
செங்கதிரும் அனுமதி கேட்டு
மேகச் சேலை போர்த்திக் கொள்ளும்
மங்கலமாம் வசந்த காலம்
மடியில் எம்மைத் தாங்கிக் கொள்ளும்!

ஒரு பாட்டுக் கெதிர்ப்பாட்டு
குயில்கள் பாடும்
அதைக்கேட்டு மறுபாட்டை
மயிலும் பாடும்!

இது கேரளத்து மண்ணல்லோ
இறைவர்களின் விண்ணல்லோ
இமயம் தாங்கும் இளமை நெஞ்சல்லோ!

வீட்டுக்கு வாசலில் பொதுவாய்க்
குட்டி அருவிகள் குதிபோடும்
காட்டுக்கும் கழனிக்கும்
பிள்ளைகள் ஓடி விளையாடும்
ஏட்டுக்கும் எழுத்துக்கும் தான்
எங்கள் கூட்டம் தலை வணங்கும்
எப்போதும் அன்பே தெய்வம்
ஆயிரம் மதங்கள் இதை முழங்கும்!

உடல் தீண்டும் மலைக்காற்று
உள்ளம் வருடும்
உயர்வான செண்டை மேளம்
உணர்வைத் திருடும்

யானை எங்கள் வீடுகளில்
குழந்தை போலே வாழ்கிறது
விழுந்தால் எழுவோம் மனிதம் ஆள்கிறது!!

-விவேக்பாரதி
24.08.2018

Popular Posts