வினைதீர்க்க விரைந்தோடி வா


 Image result for சுயமுன்னேற்றம்

வினைதீர்க்க விரைந்தோடி வா - நெஞ்சில்
    வீரத்தை ஞானத்தைக் கருவாக்கி வா
முனைநோக்கி நீயோடி வா - நாட்டின்
    மையத்தைக் காக்கும் முனைப்போடு வா

காலங்கள் உன்றன் வசம் - செய்யும்
    கடமைகள் உரிமைகள் உன்கை வசம்
ஜாலங்கள் உன்கண் வசம் - இன்னும்
    சந்தேகம் என்னவோ நீயோடி வா

வந்தாலே போதும் விழா - நீயும்
    வழுவற்ற தேய்வற்ற புதுவெண்ணிலா
தந்தாலே போதும் கரம் - பின்னர்
    தரமுண்டு பலமுண்டு இதுவே வரம்!

பிரிவுக்குள் சிக்கி டாதே - உண்டு
    பிழைப்போரின் கூட்டத்துள் நின்றிடாதே
சரிவுக்கும் ஏற்றமுண்டு - குறியைச்
    சரியாக்கு நம்நெஞ்சில் மாற்றமுண்டு!

பொய்சொல்லி ஆள்வார் தலை - வெற்றுப்
    புறம்சொல்லி எப்போதும் ஆவார் சிலை
கைசொல்லி தலை கேட்பதா? - உன்றன்
    கடமைகள் செய்யாமல் நீ தோற்பதா?

வேறு

வலுவற்ற மூங்கில்கள் நிற்பதில்லை - எந்த
    வன்காற்றும் புல்லை அறுப்பதில்லை
மலர்கொய்யும் போதிலும் அழுவதில்லை - வெல்லும்
    மனம்கொண்டு வினைசெய்ய விழுவதில்லை!
உலகத்து நீதிகள் நமக்காகவே - வாழும்
    உயிரெலாம் ஏங்குதோர் தலைக்காகவே
சிலர்வாழப் பலர்வீழ இதுநியாயமா? - வினை
    சரியாய் நடந்தேற முன்னேறிவா!!

-விவேக்பாரதி
01.08.2018

Popular Posts