காமாட்சித் தாய்

கிள்ளையுங் கரும்பும், கண்கள்
கிளர்த்திடும் நிலவும் தாங்கி
துள்ளிடும் விழிக ளோடு
தோன்றிடும் தெய்வ சக்தி
விள்ளவே இயலா வண்ணம்
விரிந்தபே ரருளைக் கொண்டாள்
நள்ளிருள் நிறத்துக் கூந்தல்
நலத்தினள் காமாட் சித்தாய்
மலரினைத் தந்தாள் தன் தோள்
மாலையுந் தந்தாள் என்னை
உலகெலாம் பார்க்கத் தன்றன்
உயரடி அமர்த்திக் கொண்டாள்
பலங்களைத் தந்தாள் உண்ணப்
பல்சுவை உணவுந் தந்தாள்
திலகமாய்க் குங்கு மத்தைத்
தீட்டினள் காமாட் சித்தாய்!
சக்தியின் சகல தோற்றம்
சாந்தமாய் விளங்குந் தோற்றம்
முக்தியின் ஆதித் தோற்றம்
முறுவலே புனைந்த தோற்றம்
மக்களின் மனத்தை ஆளும்
மகிமையே அவளின் தோற்றம்
அக்கறை பாசம் அன்பின்
அடித்தளம் காமாட் சித்தாய்!
சங்கரன் பணிந்து போற்றிச்
சரிமடம் வைத்த காஞ்சி
மங்கலப் பூமி யாளும்
மணிநிறத் தேவி காதில்
சங்கினைத் தரித்த ஈசன்
சமவுடல் வென்ற சக்தி
குங்குமப் பொலிவி லங்கும்
குணவதி காமாட் சித்தாய்!
மதுரையில் மீனாட் சித்தாய்
மணமிகு காசி தன்னில்
புதுமைவி சாலாட் சித்தாய்
புனிதரே பிறந்த காஞ்சிப்
பதியிலே காமாட் சித்தாய்
பக்தர்கள் கோவில் வைத்த
மதியில்ப ராசக் தித்தாய்
மலரடி தொழுதால் வாழ்வே!!
-விவேக்பாரதி
11.08.2018