எதிர்வீட்டுக் காதல்

எப்போது சென்றாலும் வரவேற் பாக
    எழிலான பழமள்ளி மழைபெய் தென்னைத்
தப்பாது நனைக்கின்ற எங்கள் வீட்டுத்
    தனியான சுவைநாவல் மரத்தின் மீது
இப்போது கிளிஜோடி அமர்ந்து கொண்டு
    இதயங்கள் பரிமாறி இன்பக் காதல்
அப்பியதாய்ப் பொழுதுகளைக் கழிக்கக் கண்டேன்
    ஆனந்தம் அதிற்கொண்டேன் மேலும் கீழே


இருஜோடி மண்புழுக்கள் ஒன்றை ஒன்று
    இயல்பாக புல்லித்தம் காதல் நெஞ்சம்
உருகிவிழ உறவாடும் செய்கை கண்டேன்
    உள்ளத்தில் நல்லகளி நானுங் கண்டேன்!
பருவத்தால் மழைவந்து வாசல் தீண்டப்
    பக்குவமாய் இளவெய்யில் உடனி ணைந்து
பொருதுவதும் சிலிர்ப்பதுவும் ஆகிக் காதல்
    பொழுதாக்கும் செயல்கண்டு மகிழ்ந்து நின்றேன்!

காதுக்குள் நான்கேட்ட பாட்டில் கூடக்
    கவிஞர்கள் பலவாறு புகழ்ந்த காதல்
தூதுக்கும் ஆள்விட்ட பழைய சேதி
    தோன்றிடவே பார்க்கின்ற திசையில் எல்லாம்
தோதுற்ற காதல்தான் ஆள்வ தென்னும்
    தொன்மையறி வெய்திமனங் களிக்கும் நேரம்
தீதுற்ற தைப்போலே எதிரே வீட்டில்
    திட்டடிகள் சச்சரவு கேட்கக் கண்டேன்!

தம்வீட்டுப் பெண்காதல் கேட்ட தற்குத்
    தானந்த சச்சரவு நிகழ்ந்த தென்று
அம்மாவுஞ் சொன்னவுடன் மனஞ்சு ழித்தேன்
    ஆனந்த மாயியற்கைக் காதல், பாட்டுத்
தெம்மாங்கில் வருகின்ற காதல் எல்லாம்
    தெளிவாகப் படைக்கின்ற மனிதர் மட்டும்
சும்மாவேன் காதலையே எதிர்க்கின் றார்கள்
    சுறுக்கிட்டுக் கொல்லத்தான் பார்க்கின் றார்கள்

எனக்கேட்டேன் அம்மாவும் முறைத்த வாறு
    எழுதப்போ கவிதையென எனைப்ப ணித்தாள்
மனக்காட்டில் கண்டதெலாம் எழிலாய் நிற்க
    மரத்தின்மேல் இக்கேள்வி தீயாய்த் தோன்ற
வனப்புடைய என்மனத்துக் காதல் காட்டை
    வறண்டநிலம் ஆக்கிவிடக் கூடா தென்றே
சினமுடைத்தே எதிர்வீட்டுப் பெண்ணுக் கும்நான்
    சிறப்பாக மணஞ்செய்து வைத்து விட்டேன்!

திட்டுபவர் திட்டட்டும் நானுங் செய்த
    திறனான செயல்கண்டு முன்னே கைகள்
கொட்டுபவர் கொட்டட்டும் என்றன் கண்ணில்
   கொஞ்சுகிளி புழுவெய்யில் மழைபோல் தானே
எட்டிநின்றார் அவ்விருவர்! உலக மீதில்
    இயற்கையிலே காதல்கள் வெல்வ தெல்லாம்
கிட்டநின்று காக்குமிறைச் செயல்தான் என்றால்
    கிடந்தென்னுள் இயக்குவதுந் தெய்வ மன்றோ!!

-விவேக்பாரதி
11.08.2018

Popular Posts