பலர்வாய் மொழி

1) காதல் தோல்வி பெற்றவன்:

பஞ்சல்ல நீயெரிக்கப், பாயல்ல நீபடுக்க,
நஞ்சல்ல நீபருகி நாசமுற, - பஞ்சமுற்ற
ஏழையல்ல உன்வரவுக் கேங்கிநிற்க, இஃதெந்த
நாழிகையும் தாவுகின்ற நெஞ்சு!

2) காதல் நோய் பட்டவள்:

பஞ்சனைய மெல்லணையும் பட்டுத் துகிலுடையும்
வஞ்சகத்தீ போலே வளர்ந்தழிக்கும் - நெஞ்சைத்
தலைவன்பால் அன்றேநான் தந்துவிட்டேன் காக்க
நிலையா யுளதவர் நெஞ்சு!

3) தலைவன் பிரிவில் தலைவி:

பஞ்சம் வறுமையெலாம் பட்டதுபோல் இப்போதென்
நெஞ்சம் துடிக்கும் நிலையறிவாய் - வஞ்சகனே
என்னைப் பிரிந்துநீ ஏன்சென்றாய் எப்போதும்
நின்னை நினைந்துருகும் நெஞ்சு!

4) மழையை வியந்த புலவன்: 

பஞ்சுப் பொதிமேகம் பால்சுரக்கும் அற்புதத்தைக்
கொஞ்சம் வியந்து குதிக்கின்றேன் - தஞ்சமென
வந்தமழை தானே வளங்கூட்டிக் காப்பாற்றும்
நந்தமிழைப் போலதன் நெஞ்சு!

5) புரட்சியாளன்:

பஞ்சில் நெருப்பிட்டால் பார்க்கும் சுடர்போல
நெஞ்சில் நெருப்பிட நேர்ப்படுவோம் - கொஞ்சமா
நாட்டின் பிழையழிய நாமெல்லாம் கூடிவிட்டால்
நீட்டும் சுடர்நமது நெஞ்சு!!

-விவேக்பாரதி
03.08.2018

Popular Posts