ரக்‌ஷா பந்தன்


கண்ணிமையின் ஒரிழைதான் விழுந்திடினும்
    உயிர்துடிக்கும் கண்கள்! தாய்மைப்
பெண்ணியத்தை எவரிடமும் பேணுகின்ற
    உயர்நெஞ்சம்! பிழைகள் நீக்கி
உண்மைதனை உள்ளத்தில் தைக்கின்ற
    குருமார்கள்! உடலிற் கோடு
வண்ணமுடன் வரையுங்கால் மழலைகளாம்!
    சகோதரிகள் வாழ்க்கைக் கின்பம்!


ஒருவீட்டில் ஒருதாயின் அரவணைப்பில்
    வளர்க்கின்ற ஒருவன் பின்னாள்
தெருவெல்லாம் வீடாகத் திரும்புதிசை
    யாவுந்தாய் தெய்வ மாக
மருவியதைக் காண்பதுவும் மனம்கொஞ்ச
    வாழ்வதுவும் மகிமை கொண்ட
திருநாடாம் நம்முடைய பாரதத்தில்
    மட்டுந்தான் கிடைப்ப தாகும்!

பணிக்கின்ற மென்கண்கள் இனிக்கின்ற
    செவ்வாய்கள் படைபோல் சேரத்
திணிக்கின்ற இனிப்புவகை திரள்கின்ற
    ஒருகயிற்றின் திண்மைக் கெல்லாம்
பிணைக்கின்ற புதுப்பாசம் பிறக்கின்ற
    நற்பொழுது பின்னால் வந்து
மணக்கின்ற ஒருநாளாய் மலர்ந்ததுநம்
    தமிழ்நாட்டில் ரக்‌ஷா பந்தன்!!

-விவேக்பாரதி
26.08.2018

Popular Posts