மர்மக் குயில்

இந்தக் குயிலோசை எந்தத் திசையிருந்து
    இதயம் பறிக்க வருகிறதோ? - என்
    இளமை நனைக்க வருகிறதோ?
சந்தத் தமிழ்ப்பாட்டு சிங்கத் தொனியில்வரும்
    தனிமை கெடுக்க வருகிறதோ? - என்
    தவிப்பைத் தடுக்க வருகிறதோ?


பகல்போல் மாறிய மாலையிலே
    பலகுரல் ஓசைகள் காதினிலே - அதில்
அகமொழி போலிக் குயிலின் ஓசை
    ஆழத்தைக் காட்டும் அலையோசை!

(இந்தக் குயிலோசை)

என்னைப் புதிதாக்கிச் சிந்தைக் களத்திலிது
    ஏழு சுரங்களையும் படிக்கும் - இந்த
    ஏழை மனதைச் சிறைபிடிக்கும்!
தன்னை நிழலாக்கிச் சங்கீதத்தின் வழி
    தனது முகம்காட்டிச் சிரிக்கும் - அந்தத்
    தகுதி வரவேண்டும் எவர்க்கும்!

யாரிதைக் கூவிடச் சொன்னாரோ?
    யாழெனப் பாடல்கள் தந்தாரோ? - இங்கு
நேரில் வராமல் தெய்வத்தைப் போல
    நெஞ்சில் நிறைந்திடச் சொன்னாரோ?

(இந்தக் குயிலோசை)

மண்ணில் உயிரோசை வாழும் வரையிலிது
    மனத்துக் குகையில் எதிரொலிக்கும் - இந்த
    மயக்கம் கவிக்குச்சுதி கொடுக்கும்!
கண்ணில் தெரியாத காட்சி பலகோடி
    கருதக் கருத அவை இனிக்கும் - இது
    காலம் மாற்றாத வழக்கம்!

பூக்களைத் தூவிடும் தென்றலுடன்
    புல்லாங் குழலிசை கேட்கிறது - ஒரு
தீக்கதிர் நெஞ்சில் மூண்டு வளர்ந்து
    தினம் போராட அழைக்கிறது!!

(இந்தக் குயிலோசை)

-விவேக்பாரதி
23.07.2018

https://drive.google.com/file/d/1l617Udhqi1ZL4GhE1GvQk6Ps4CqzjKoB/view

Popular Posts