குறிப்பிடம் தவறியது


காத்திருக்கச் சொல்லி விட்டு
    காற்றைப்போல் பறந்து விட்டால்
பூத்திருந்த கண்கள் எல்லாம்
    பூழ்தியிலே வாடு மன்றோ...
வேர்த்திருந்த நெஞ்சுக் குள்ளே
    வேதனைகள் தொடர்ந்த டிக்கப்
பார்த்திருந்த இளமை மட்டும்
    பாழாகி வீழ்ந்த தம்மா!


இரவினில் இருக்கச் சொன்னாய்
    இமைக்கத வவிழ்த்து வைத்தேன்
கரங்களை இணைப்ப மென்றாய்
    கனவுகள் வளர்த்து வைத்தேன்
சுரமின்றி சுதித விக்கச்
    சுழன்றிடும் உயிர்து டிக்க
மரமென நின்றி ருந்தே
    மரணத்தைத் தழுவு கின்றேன்

தவறுகள் உனது மில்லை
    தண்டனை உனக்கு மில்லை
கவிதைகள் இருக்கும் மட்டும்
    கவலைகள் கணப்ப தில்லை
திவலைகள் சிந்திச் சிந்தி
    தெப்பமாய் நனைந்து விட்டேன்
தவமென அதைநி னைத்துத்
    தடத்தினில் தொடரு கின்றேன்!

நெஞ்சினில் ஆசை வந்து
    நிகழ்த்திய கூத்துக் கெல்லாம்
வஞ்சனைக் கனவு வந்து
    வனைந்திட்ட காட்சிக் கெல்லாம்
அஞ்சுகம் உன்னைச் சொல்லி
    ஆவதும் ஒன்றும் இல்லை
கொஞ்சமே புலம்பி நிற்பேன்
    கோபத்தால் எனைய ழிப்பேன்

உன்முகம் பார்த்து நிற்க
    உவகையே கொண்டு வந்து
பொன்னிலா முகத்தைக் கண்டு
    பொழுதினை மறந்தி ருந்தேன்
என்னிலை வியப்பு கண்டாய்
    எதற்குளும் குதர்க்கம் கண்டாய்
உன்னினை வெந்தப் பக்கம்
    உரிமையோ டிணங்கிச் செல்வாய்

இரவெலாம் கவிதை பேசி
    இதயமே கசக்கு கின்றேன்
வரமெலாம் வாய்த்தால் கூட
    வளைக்கரம் மட்டும் கேட்பேன்
சிரமெலாம் நிறைந்தி ருக்கும்
    சிந்தனை ஆண்ட ராணி
அரசவை சுடுகா டாகி
    அரைமணி ஆன தம்மா

எனக்கென இறைவன் தந்த
    எழில்மிகு பாவாய் வாழ்க
மனத்தினில் என்றும் வாழும்
    மங்கையாம் இன்பம் வாழ்க
தினந்தினம் நூறு பாடல்
    தீட்டிட வைத்தோய் வாழ்க
வனப்புடை மல்லி முல்லை
    வளர்மதி யழகே வாழ்க

பெண்ணுடன் பேசி இந்தப்
    பேரிரா கழிக்கப் பார்த்த
எண்ணமே கெடுக! நீதான்
    எப்போதும் நரகைச் சூழ்க
கண்களும் சுகயின் பத்தைக்
    கருதிய நெஞ்சும் நோக!
புண்களும் துயரும் சூழ்ந்த
    புழுவுடல் மரித்து வீழ்க

காதலே நீயும் வாழ்க
    கனவிலே மட்டும் வாய்க்கும்
போதமே நீயும் வாழ்க
    பொழுதெலாம் மக்கள் நெஞ்சில்
மோதியே தனிமை நீக்கி
    மொத்தமாய் மாற்றும் சின்னக்
காதலே வாழ்க! தெய்வக்
    கருணையே வாழ்க வாழ்க!!

#மௌனமடிநீயெனக்கு

-விவேக்பாரதி
04.08.2018

Popular Posts