கபாலீஸ்வரன்

சிவநாமம் போதம் தரும் - சொல்லும்
சிந்தையில் இன்பம் வரும் 


கபாலீஸ்வரன் கருணாசாகரன்
கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்!  (அந்தச் சிவநாமம்)

திசைகளில் எங்கும் திரள்கின்ற வெளிச்சம்
    தீபத்துக்கார் பொறுப்பு?
தசைகளில் கூட தகித்திடும் உணர்வு
    தனல்வதுயார் நெருப்பு?
இசைகளில் எல்லாம் இருக்கின்ற இறைவன்
    இதயத்திலும் இருப்பு!
விசைமிகு நெஞ்சில் விளைவதெல் லாமும்
    விசித்திரனின் நடிப்பு!

கபாலீஸ்வரன் கருணாசாகரன்
கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்!

கண்களை மூடிக் காண்கின்ற இருளில்
    காளனின் ஒளிநடனம்
பண்களில் பாட்டில் பார்க்கிற கலையில்
    பசுபதியின் வடிவம்
உண்மையில் எங்கும் உறைகின்ற தெய்வம்
    உணர்வது தான்கடினம்
அண்மையில் தெரிந்தும் அக்கறை நாடும்
    அறிவினில் அவன் விகடம்!

கபாலீஸ்வரன் கருணாசாகரன்
கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்!

எத்தனை பார்த்தும் முடிவற்ற வானம்
    ஏகனின் திருப்பாதம்
சித்தினைத் தேக்கிச் சீரினில் நிறுத்தத்
    தென்படும் அவன் போதம்
வித்தினை மரமாய் மறுபடி விதையாய்
    விளைப்பது அவன் வேதம்
இத்தனை சொல்லும் இத்தனை பொருளும்
    இயற்றுவ தவன் நாதம்!

கபாலீஸ்வரன் கருணாசாகரன்
கவிதா தலைவன் கதி சேர்க்கிறவன்!!

-விவேக்பாரதி
06.08.2018
பாடல்

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி