உடனே விழி தமிழா - பைந்தமிழ்ச் சோலை கவியரங்கம்

உடனே விழி தமிழா - பைந்தமிழ்ச் சோலை கவியரங்கம்


விநாயகர் காப்பு

மஞ்சள் உருப்பிடித்த மாதா வினைகாக்க
நெஞ்சம் நிமிர்த்திய நேர்முகனே - அஞ்சேல்
எனச்சொல்லி இந்த எளியேனைக் காப்பாய்
உனைச்சொல்லில் வைத்தேன் உயர்த்து!

தமிழ் வாழ்த்து

தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
   தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
அமிழ்த மாகி வந்து நின்ற
   ஆசியே தமிழ் தமிழ்!

முகிழ்ந்தெ ழுந்து வீசு கின்ற
   முறுவலே தமிழ் தமிழ் !
அகழ்ந்து கொண்டு நெஞ்சில் ஓடும்
   ஆற்றலே தமிழ் தமிழ்!

நாவெ டுத்த மனிதன் சொன்ன
  நல்லசொல் தமிழ் தமிழ்!
பாவெ டுத்த கவிஞர் சொல்லும்
  பாட்டெலாம் தமிழ் தமிழ்!

 தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
   தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
அமிழ்த மாகி வந்து நின்ற
   ஆவியே தமிழ் தமிழ்!

தலைவர் வாழ்த்து

பேராசான் தந்த பெருமை மிகுமவையில்
பேராசை யாலேநான் பேசவந்தேன்! - ஊராசி
பெற்றுயர்ந்த மாவரதன் பெற்றியெலாம் பாடிடக்
கற்றுயர்ந்தோர் செய்வார் கவி!

அரங்கத் தலைவர் அழகுத் தமிழைத்
தரங்கமென வீசுகின்ற தங்கம் - மறந்தநம்
சங்கத் தமிழெடுத்துச் சாற்றுவார் பாட்டுத்தார்!
சிங்கக் கவினப்பன் தீ!

உடனே விழி தமிழா

உடனே விழி தமிழா - என்ன
உறக்கம் இது புதிதாய்?  

தமிழா என் தமிழா - உன்
  தரங்களை எல்லாம் தடுத்திடு வோரால்
அமிழ்த்தப் படுகின்றாய் - உனது
  ஆற்றல் பெருமலை பேர்க்கும் அதிசயம்
குமைந்திவை அறியாமல் - நீ
  குணிந்தவ னாகி அடிபல வாங்கி
நிமிர்தல் மறக்கின்றாய் - உன்
  நினைவை எழுப்பிட கனலைப் பதிக்கிறேன்!

உடனே விழி தமிழா

தேசத்துச் சிந்தனையே - அற்று
  தெளிவை மறந்தொரு பழியின் நிலையினில்
மாசுற்று வீழுவதா? - பல
  வளங்கள் படைத்தநம் செழுமை நிலத்தினைத்
தூசுக்குள் தள்ளுவதா? - வெறும்
  தோற்றப் புகழ்ச்சியில் நாட்டம் மிகக்கொண்டு
ஆசையில் வாடுவதா? - நீ
  அறிவை வளர்த்திடக் கனலைப் பதிக்கிறேன்!

உடனே விழி தமிழா!

விளம்பரம் நம்பிநம்பி - மதி
  விலையில் சறுக்கிட வாழும் நிலையிருள்
உளத்தில் பிரிவினைகள் - மிக
  உயர்வாய் வளர்வது கொடுந்துயர் பேயிருள்
களத்தை மறந்துவிட்டு - பெருங்
  கணினிகள் செய்யும் கணக்கும் இருளதில்
விளக்கின் ஒளிகண்டுநீ - இரு
  விழி திறக்கப் புதுக் கனலைப் பதிக்கிறேன்!

உடனே விழி தமிழா!

உன்விழிப்பே உதயம் - இறை
  உனக்குள் இருந்துபல் கணக்கை நிகழ்த்திடும்
உன்னதப் பேரிதயம் - அதன்
  உச்சி பிடித்துநீ கச்சித மாகவே
மின்னல் படைத்துவிடு - செயும்
  வினையும் கவனமும் சூல்கொண்ட கார்முகில்
இன்னும் உறக்கமென்ன - தோள்
  இமயம் நிகர்த்திடக் கனலைப் பதிக்கிறேன்!

உடனே விழி தமிழா

சாதியை நீக்கிடடா - தமிழ்ச்
  சமுகம் பழையது மிகவும் பெரியது
நீதியைக் கொண்டதடா - அதை
  நீசர் வெறுக்கிறார் நீவந்து காத்திடு
ஆதியும் நம்மொழியே - சுவை
  அமிழ்தக் கலசங்கள் தமிழக் கவிதைகள்
வீதியெல் லாமுழங்கு - புது
  வீச்சுடன் நீவரக் கனலைப் பதிக்கிறேன்!

உடனே விழி தமிழா

தெய்வத்தில் நம்பிக்கையும் - அது
  தெரிவது நாம்செயும் கடமையி லென்கிற
உய்வித்தையும் அறிந்தே - பலர்
  உயர்ந்திட உயர்த்திட துள்ளி நடந்திடு
கைவைத்த இடமமிர்தம் - உன்
  கரங்களை போலொரு தெய்வமில்லை மதி
மெய்வித்தில் ஆழ்ந்திடட்டும் - விதை
  மேல்வைத்த தீயினில் வாழ்ந்து செழிக்கட்டும்

உடனே விழி தமிழா! - என்ன
உறக்கம் இது புதிதாய்??

-விவேக்பாரதி
23.09.2018

Popular Posts