காளி நினைப்பு
காரிருளின் வேளைதனி லேநிலவைத் தேடியவோர் கனிந்த பத்தன்
கோரியசெவ் வாக்கினிலும் கோலமிகும் பாட்டினிலும் குளிர்ந்து, பொன்னை
நேரில் வானில் சிரித்து வீசிச்
சீர்திங் களையே செய்தாய் காளீ!

மூடனெனப் பேச்சிழந்து மூளையிலி யாயமர்ந்து முழுதுங் கண்ணீர்
வாடலெனக் காலநிலை வோட்டியவன் நாவினிலே வலிகொள் சூலம்
ஏடாய் நின்பேர் யாக்கக், கவிஞன்
பாடல் புனையச் செய்தாய் காளீ!

காவினிலோர் தீயரக்க னேகியுயிர் யாவுமழக் கடுமை செய்தாங்
காவலினா லாடுகையில் தீயவனை மாய்த்திடவே திரண்டு தீயை
ஏவித் துன்பந் தீர்த்தாய்! உலகோர்
பாவம் விலகச் செய்தாய் காளீ!

வேகத்துட னேகவிதை வீசிடுவோர் நாவினிலே விளையும் சந்தம்
ஆகமங்க ளாகிநிதம் பூமியிலே பூரணமா யருளுஞ் சிம்மம்
யாகம் நின்பேர் சொல்லல்! தவமாம்
போகம் நினைவாய்ச் செய்வாய் காளீ!

நானுமெனை நாடவுயிர் நாளமெலாங் காளிபெயர் நலமாய்க் கேட்பேன்!
ஞானமென்ற னாழ்மனத்தி னோரத்தே நாடோறும் நலியா தோங்கும்!
வானும் மண்ணும் நீநான்! ஒளிகொள்
தேனும் மலரும் நீநான் காளீ!!

-விவேக்பாரதி
24.09.2018

Popular Posts