தமிழனைக் கண்டால்

 Image result for தமிழன்

இனமானம் மொழியுணர்வு தேசப் பற்று
    இருக்கின்ற ஒருதமிழன் அவனைக் கண்டால்
மனத்தோடு மதியுமிந்த உடலும் கூட
    மலரடியை வணங்குவதாய்த் தன்மை வேண்டும்
தினம்நூறு போராட்டம் தலைமைச் சண்டை
    தின்றழிக்கும் பேராசை பகைமைக் கூச்சல்
எனவாழும் தமிழர்க்குள் ஒருவன் இவ்வா
    றெழுந்தாலே அதைப்போற்றும் உள்ளம் வேண்டும்!


தன்னாசை யாயிந்தத் தமிழர் நாட்டைத்
    தரணிபுகழ் கொளவைக்கும் சித்தாந் தத்தை
முன்வைத்துப் பேசுகின்ற அவனைக் கண்டால்
    முடிமன்னர் படைகூட துதித்தல் வேண்டும்!
என்னுரிமை என்றெவர்க்கும் எடுத்துக் காட்டி
    எப்போதும் தொண்டனென உழைக்கும் நெஞ்சம்
மின்னலெனச் செயலாற்றும் வேகம் கண்டால்
    மீண்டுமீண்டு மவனுழைக்கச் செய்தல் வேண்டும்!

அத்தகைய தமிழனைநாம் அகத்தில் ஏற்றி
    அன்றாட அவலத்தை நீக்கும் வண்ணம்
புத்திளமை எண்ணத்தை விதைத்து விட்டால்
    புரட்சிகளே தேவையிலை புதுமை நேரும்!
சித்தாந்தம் பலவாகிப் பிரிந்த போதும்
    சிறந்ததமிழ் கூப்பிட்டால் சேர வேண்டும்
கொத்தான நாமினிமேல் தோப்பாய் ஆனால்
   கொத்தவரும் கழுகினங்கள் அஞ்சுந் தானே!

-விவேக்பாரதி
04.09.2018

Popular Posts