அவள் வந்த காலைImage result for morning painting

காலை உனதுமுகம் கண்முன்னே வந்துவிட்டால்
வேலை அனைத்திலும் வேகம்வரும் - மாலையெலாம்
உன்னொடு பேசி உறங்கிட வேண்டுவேன்
என்னோடு சேர்ந்தே இரு!


இருகைகள் கோப்போம் இமைமூடிக் கொண்டே
பெருவெடிப்பைப் பார்ப்போம் பெரிதாய் - ஒருகணத்தில்
நீயாக நானும் நிலைமாறக் கூடுமே
ஓயாது காதல் ஒலி!


ஒலிசெய்யும் சந்திரனும் ஓங்கியவிண் மீனும்
பலிசெய்யும் வெண்பனியும் பார்க்கக் - களிகொண்டு
பொல்லா இரவினைப் போக்கிடுவோம், காதலுக்குள்
சொல்லாத ஒன்றே சுகம்!


சுகமான தென்றல் சுவையாக மின்னல்
அகமெங்கும் தாவுகிற ஆவல் - சகமென்னும்
நாட்டை மறந்து நமதுசொர்க்கம் உண்டாக்கிப்
பாட்டைப் படிப்போம் பறந்து!


பறந்து பறவையாய்ப் பாரைச் சுழற்றிப்
பிறந்த பயனைப் பிடிப்போம் - கறந்தபால்
உள்ளத்தைக் கொள்வோம் உடல்தாண்டிச் சென்றிடுவோம்
கள்ளத்தை நீங்கக் கனல்!


கனலாயுன் தேகம் கரியாயென் தேகம்
அணைக்கின்ற போதே அழகு - முனைப்போடு
கட்டிப் பிடித்தால் கவலையெல்லாம் ஓடிவிடும்
முட்டிப் பிடித்துத்தா முத்து


முத்தான பாவாய் முறுவல்செய் இந்நாளில்
சத்தெல்லாம் கொள்வேன் சகம்படைப்பேன் - வித்தாகக்
காதல் அமையும் கவிதை நிலைத்திருக்கும்
மோதலுக்கு நம்நாட்டில் முட்டு


முட்டும் நினைவலைகள் முந்தி அடித்திருக்கக்
கொட்டும் கவிதைகள் கொப்பளிக்க - எட்டாது
தூரத்தில் நீயிருக்கத் தூக்கம் விழித்ததும்
பாரத்தைக் கொட்டுகின்ற பாட்டு


பாட்டு படிப்போம் பலசுகங்கள் நாம்படைப்போம்
கேட்டு ரசிப்போம் கிளர்ந்திடுவோம் - ஊட்டமாக
முத்தம் கொடுப்போம் முறுவல்கள் செய்திருப்போம்
சித்தம் முழுதும் சிலிர்ப்பு!


சிலிர்த்து நினைந்து சளைக்க, இரவுங்
குளிர்ந்த பனியால் கொளுத்த, - மலர்ந்ததே
விண்சிவக்க வெய்யோன் விரிந்த பொழுதினி
கண்சிமிட்டி வைத்திடுவோம் கால்!!


-விவேக்பாரதி
18.06.2018

Popular Posts