விநாயகப் பிரார்த்தனை

 
அம்பிகை மைந்தனை ஆனை முகத்தனைத் 
தும்பிக்கை நாதனைத் துன்பம் தவிர்ப்பவனை 
நம்பித் தொழுவார் நலம்பெறுவார்! கைகூப்பிக் 
கும்பிட்டால் மாறும் குறி! 

ஐயா கணநாதா! அன்பே வடிவான 
தேவா! குழந்தை ரூபா!  நின்சரணம் 
வாயார வோதி மனதாரச் சிந்தித் 
தோயாமல் நான்கேட்கும் உட்பொருள் ஒன்றேதான் 
பாதார விந்தப் பதவிதந் தெனக்குன் 
நாதா விநோதப் புகழ்சொலும் நற்பணியும் 
சித்தம் மனம்புத்தி ஆங்காரம் இவைநான்கும் 
வித்தாய் எனக்குள் அடக்கும் மனோபலமும் 
காளி அருட்பதம் காணப் பெருந்தவமும் 
தோளில் வலுவும் நெஞ்சில் உறுதியும் 
கண்ணில் தெளிவும் கருத்தில் அமைதியும் 
பண்ணில் சுவையும் படைத்தநீ அருள்வாய் 
சொல்லும் மந்திரம் சுவையொளிர் கவியாய் 
வெல்லும் விதமே வெற்றிகள் அருள்வாய் 
ஈசா மாலவா பிரம்மா கந்தா 
நேசா வீதிகள் நிறைய வசிப்பவா 
தந்தம் ஒடித்துத் தலையெழுத் தெழுதியவா 
தொந்திக் கடவுளே தூய மோனமே 
வானப் பதியில் வலுமிக்க நாயகனே 
மோனத் தவத்தை முழுதும் நான்செய்து 
பாராத நின்படைப்பின் பாரமெலாம் பார்த்துத் 
தீராத காதலினால் தினமும் மெய்யுருகி 
எம்தவத்தால் ஊர்மக்கள் ஏகாந்த நிலையெய்தச் 
வன்னக் கவிதை வளமாய்ப் படைக்கிறேன்
ஆதி மூலமே ஆனந்தப் பிரியனே 
மோதக நெஞ்சம் முழுதும் உனக்கேதான் 
வித்தைக் கரசே வீரியம் எல்லாம் 
முத்தாத் திரட்டி முழுநிலை யெய்தி 
பாரத நாடும் பாரும் 
சீருடன் வாழச் சிறுகண் சிமிட்டே!!

-விவேக்பாரதி
13.09.2018

Popular Posts