என் ஆசிரியர்

இன்னொரு தாயாய் வாழ்வில்
இருந்துபல் லறிவும் பண்பும்
பன்னரும் ஞானச் செல்வம்
படைத்திடும் உத்தி யெல்லாம்
சொன்னவர் வாத்தி யார்கள்
சொல்லிய பாடத் தாலே
இன்னமும் உயர்ந்தார் அன்றி
இதுவரை தாழ்ந்தா ரில்லை!
மாணவன் உயர்ந்து கொண்டே
மாண்புறு நிலைகள் காண்பான்
ஏணியாய் இருந்த ஆசான்
என்றுமே உயர வெண்ணார்
பேணிடும் பணியை மட்டும்
பெரிதென நினைத்துச் செய்து
காணுமா ணவரைக் கண்டால்
கண்ணுடன் மனம் நனைப்பார்!
அதட்டுவார் அன்பைக் கொட்டி
அணைக்கவும் தயங்க மாட்டார்
பதட்டமே இல்லா மோனப்
பதத்தினை நமக்குச் சொல்வார்!
உதட்டள வன்றி என்றும்
உளத்தினி லிருந்து நம்மை
மதலைபோல் பார்ப்பார்! எல்லா
மகிழ்வையும் நமக்குச் சேர்ப்பார்!
கல்வியைத் திணித்து வாழும்
கயவரின் கூட்டத் துள்ளே
நல்லபல் ஆசான் மார்கள்
நலமிகு கல்வி யோடே
சொல்லரும் தமது ஞானம்
சொல்லிநாம் சிந்தை செய்ய
வல்லதோர் தளம மைப்பார்
வாழ்க்கையின் பாடம் செய்வார்!
ஆசுகள் தம்மை என்றும்
இரியவே பிறந்த மக்கள்
தேசுடை உலகத் தோடு
தெய்வமும் உணர்த்தும் மக்கள்
பாசமும் நட்பும் காட்டும்
பண்புடை மக்கள்! எந்தக்
காசிலும் பணியாக் கல்வி
காட்டிடும் கலைஞா னத்தர்!
உத்தம குருக்கள் என்றும்
உயர்புகழ் விரும்ப மாட்டார்
வித்தகம் யாவும் கற்ற
வினைஞராய் ஆனால் கூட
புத்திளம் மாண வர்கள்
புரிதலுக் கெளிமை ஏற்பார்!
அத்தகு கடவுள் பாதம்
அணிபெற வணங்கு வோமே!!
-விவேக்பாரதி
05.09.2018