மீனாள் வாழ்க

உடலுறுப்பும் உயிரிருப்பும் உணர்வுதங்கும்
அறிவூற்றும் உன்னால் அம்மா
நடைநடத்தல் கவிபடித்தல் காற்றோடு
திரிதலிவை நடத்து கின்றாய்
கிடுகிடுக்க என்னுள்ளக் காட்டுக்குள்
கூத்திடுமோர் கிளர்ச்சித் தெய்வம்
மிடுமிடுக்க ஆடிடும்நீ என்காளி
எனையீன்ற மீனாள் வாழ்க!
பால்தந்தாய் பயம்கொல்லும் ஆற்றலையும்
நீதந்தாய் பக்கு வத்தின்
கோல்தந்தாய் அறிவென்னும் கோபுரத்தில்
நானேறக் கொடிகள் தந்தாய்
நூல்தந்தாய் என்வலிமை யாவுமொரு
கட்டுக்குள் நுணுக்கித் தந்தாய்
வேல்தந்தாய் எழுதுங்கோல் வேகத்தில்
சொல்லிடுமென் மீனாள் வாழ்க!
உனக்கென்றென் உள்ளத்தில் ஓரிடம்நான்
வைக்கவில்லை உளமே நீதான்
எனக்கென்ன வேண்டுமென எப்போதும்
நீயறிவாய் ஏழை என்னை
வனப்புடைய மலராக்கி நீகாம்பாய்
அடிதாங்கி வளர்ப்பாய் அம்மா
மனக்குகையின் சலனயிருள் மாய்க்கின்ற
ஒளிவிளக்கு மீனாள் வாழ்க!
பாராட்டும் ஒருதோழி பண்பூட்டும்
உயராசான் பாடல் கேட்டுச்
சீராட்டும் நல்ரசிகை சினக்கின்ற
நிலைப்பகைவன் சிந்தனைக்குள்
தேரோட்டும் எண்ணம்நீ தோள்சாயத்
தோழன்நீ தெளிந்தெ னக்கு
மாரூட்டும் பாலோடு மலைஞானம்
ஊட்டியவெம் மீனாள் வாழ்க!
நாமிணைந்து செய்யாத சேட்டைகளோ
லீகைகளோ நிலத்தில் இல்லை
நாமிணைந்து பேசியதாய் நினைவிருக்கும்
வார்த்தைகள்வே றெவரும் பேசார்
பூமியினைப் போற்பொறுமை பொறைதீர்ந்தால்
தீநெருப்பு புதிர்நீ என்றும்
மாமலைபோல் என்னருகில் மலர்கின்ற
நம்பிக்கை மீனாள் வாழ்க!
முன்னேறும் பாதையிலே முள்ளிருந்தால்
நீகளைவாய் முனைப்பைக் கூட்டு
பின்னேறும் பெற்றியெலாம் பெரிதெல்ல
ஓடென்றே பெருமை செய்வாய்
என்னேரும் இல்லாத ஏணியம்மா
என்செருக்கை எரிக்கும் தேவீ
மின்னேறும் விழியுடையாய் மீட்டுமிசைக்
குரலுடையாய் மீனாள் வாழ்க!
சிந்திக்கச் சிந்திக்கச் சிந்தையெலாம்
நிற்பவளே சிறிய பாட்டால்
வந்திக்கப் பார்க்கின்றேன் வார்த்தைகளைக்
கோக்கின்றேன் வரிசை கட்டிப்
பந்திக்கச் சொல்லெல்லாம் நிற்கிறதே
உன்புகழைப் பாடு தற்கு
முந்திவிழும் சொல்லெல்லாம் முத்துச்சொல்
அவைசொல்லும் மீனாள் வாழ்க!!
-விவேக்பாரதி
03.09.2018
Comments
Post a Comment