சிரமடி காணாச் சிவபெருமான்


சிவசிவ என்றால் சிந்தனை ஓங்கும்!
ஜீவனுக் குள்ளே வானொளி தோன்றும்!
கவலைகள் போகும்! கவிதைகள் நேரும்!
கடவுளர்க் கடவுள்! கால்களைச் சூழ்வோம்!


பிரம்படி பட்டான், அம்படி பட்டான்,
பித்திவ னென்றும் பேரினைப் பெற்றான்,
சிரமடி காணாச் சிவபெரு மானைச்
சிந்தனை எங்கும் வந்தனை செய்வோம்!


நஞ்சினை யுண்டான் நம்நலங் காக்க,
நாகம ணிந்தான் நம்பயம் போக்க,
மஞ்சுநி றத்தாள் மங்கையை மேலே
மாண்புற வைத்தான் மலரடி பணிவோம்!


கங்கையைக் கொண்டான் கார்சடை கொண்டான்
கனன்றிடும் நெருப்பைக் கைகளிற் கொண்டான்
திங்களைக் கொண்டான் திசைகளைக் கொண்டான்
தீவிழி யானின் திண்கழல் புகுவோம்!


ஒருமுகம் செய்தால் அவன்முகம் தெரியும்
அகமுகம் எங்கும் அருள்முகம் விரியும்
திருமுக ஜாலம் தினமொரு கோலம்
தீண்டமி ழானைத் தினம்பணி வோமே!


-விவேக்பாரதி
06.10.2018


படம் : மயிலை கபாலீஸ்வரன்

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1