அவன் பதத்திற்குக் கீழே

Image may contain: 3 people, food


 அவன் பதத்திற்குக் கீழே - இந்த
    அண்ட பகிரண்டம் சுழலும்
தவம் முயல்வார்க்குள் எல்லாம் - இந்தத்
    தலைவன் பாதமே தெரியும்!
சிவனும் குருவென்னும் வேலன் - சின்னச்
    சிரிப்பு சிரிக்குமணு கூலன்
கவலை இனியில்லை நெஞ்சே - கந்தன்
    கழல்கள் உண்டெதற்கும் அஞ்சேல்!


வள்ளி தெய்வானை யோடு - வீதி
    வலமும் வருகின்ற போது
உள்ளம் எங்குமவன் காட்சி - எந்த
    உயிரின் உள்ளுமிவன் ஆட்சி
கள்ளம் இல்லாத நெஞ்சில் - இந்தக்
    கந்தன் வாழுவது திண்ணம்
வெள்ளம் இவன்வார்க்கும் கண்ணீர் - துன்ப
    வெம்மை தணிந்துயரும் எண்ணம்!


வேலும் உண்டுநமைக் காக்க - இந்த
    வேந்தன் உண்டுநலம் சேர்க்கக்
காலன் எதிர்நிற்கும் போதும் - சொல்லக்
    கந்தன் பேருண்டு போதும்!
ஞாலம் காக்கவரும் வேலன் - தமிழ்
    ஞானி யர்க்குதவு சீலன்
கோலத்தில் சின்ன பாலன் - கந்தன்
    கொல்லும் கயமைக்குக் காலன்!


-விவேக்பாரதி
12.10.2018

Comments

Popular Posts