கடுகு தவழ்ந்த கடல்


எதற்கும் வரையறை கொடுத்துப் பழகிய தோஷத்தால், ஞானக் கடலின் வரையறையை ஒரு கடுகு சொல்கிறது. 

நெஞ்சைக் கடைந்தெடுக்க நேரும் சுகநிகழ்வு!
நஞ்சு கலந்ததோர் நன்மருந்து – அஞ்சிடவும் 
ஏற்றிடவும் வைக்கும் எரிதழல்! ஞானமெனும் 
மாற்றிட மில்லா மறை! (1) 

மறையில் வகுப்பதும், மாபெரியோர் சொல்லும் 
நெறியில் இருப்பதும், நில்லா – இறையென்று 
சொல்லுவதும் ஞானச் சுடரைத்தான்! அந்தத்தில் 
வெல்லுவதும் ஞான விடை! (2) 

விடையறியாக் கேள்விக்கு வித்தாகிப் பின்னர் 
மடையாய்ப் பதிதந்து மாய்க்கும்! – கடைக்கோடி 
புல்லும் புழுவுக்கும் பூண்டிற்கும் சேர்கின்ற 
பொல்லாத போகப் பொருள்! (3) 

பொருள்மீதும் தேகப் பொலிவுகளின் மீதும் 
அருள்மீதும் அன்பிலும் ஆறா திருக்கின்ற 
ஆசை அடங்க அவதரிக்கும் நெஞ்சத்தில்
பேசும் அசரீரிப் பேர்! (4)

பேருக்கும் சேர்க்கும் பெருமைக்கும் மற்றும்வே 
றாருக்கும் கோடா அரசியலாம்! – ஊருக்குப் 
போகும் வரையமைதி போகா மனத்தெரியும் 
வேக நெருப்பின் விசை (5) 

விசையோடு பாயும் விசித்திர உள்ளம் 
அசையா அமைதியில் ஆழ்ந்தால் – கசையாய்நம் 
சொல்மாற்றும் மந்திரம்! சொல்லில் அடங்காது 
வல்லோனாய் ஆக்கும் வரம்! (6) 

வரத்தால் வருவதன்று வாங்கிக் கொடுக்கும் 
கரத்தால் வருவதன்று கல்வி சிரத்தையுடன் 
கற்றால் வருவதன்று காட்டுவழிக் குள்விழிப்பைப் 
பெற்றால் வரும்ஞானப் பேறு! (7) 

பேறுடையான் செல்வம் பெரிதுடையான் தேகத்தில் 
வீறுடையான் உள்ள விரிவுடையான் – கூறும்மெய்ச் 
சொல்லுடையான் என்றாலும் சோதித்த பின்னர்தான் 
நல்லவிதம் சேரும்ஞா னம்! (8) 

ஞானமே தெய்வம் நமதறிவே கோவிலரும் 
மோனமே உச்சரிக்கும் மந்திரம் – ஞானமே 
ஆளும் அரசாட்சி அண்டும் அகசாட்சி 
நீளும் அரசின் நிழல் (9) 

நிழலெது உண்மை நிஜமெது? நேரும் 
விழலெது சுற்றும் விதியில் தழலெது?
நிம்மதி தானெது நீளும் வினாக்களுக்கு 
நம்ம ஞானம் பதில்! (10)

பதிலாகும் கேள்வி பலவாகும் ஞானம் 
கதவாகும் வாழ்வின் கதியை யதுசொல்லும் 
தன்னை அகழ்ந்திங்கு தான்காணும் சங்கதியே 
முன்னை உணரா முரண்! (11) 

முரணான எண்ணம் முகிழ்கின்ற சிந்தை 
நிந்தரம் காணும் நிலையில் – வருபவளாம் 
பட்டுத் தெளிகின்ற பட்டறிவே ஞானத்தாய் 
தொட்டுத் தொடக்கும் செயல்! (12) 

செயலால் மனிதர்க்குச் சேர்கின்ற கர்ம 
வியப்பெல்லாம் நன்கு விளங்கச் – செயலெலாம் 
நன்மைப் பலன்கூட்ட ஞான வொளிவந்து 
மின்னாய்ப் பரவும் மிளிர்ந்து (13) 

மிளிர்ந்திடும் தேகம் மிடுக்கும் அகவை 
கிளர்ந்திடும் உள்ளம் கிடந்து – வளர்ந்திடும் 
இவ்வுயிரும் போகுமெனும் இவ்வறிவு கொண்டோரின் 
செவ்வறிவு ஞானச் செழிப்பு (14) 

செழிப்புக் குழைப்பதும் சேர்கின்ற செல்வம் 
அழியக் கரைப்பதும் ஆகி – முழுதாகப் 
பந்த உலகத்துள் பாய்கின்ற சிந்தையிலும் 
வந்திடும் ஞான வனப்பு! (15)

வனப்பும் உருவும் வளரும் உயிரும் 
நினைப்பும் நிகழ்த்தும் நிகழ்வும் – மனத்தில் 
அசைகின்ற பிம்பம், அவைவிலக ஞானம் 
விசைபோடும் உள்ளே வியப்பு! (16) 

வியப்படைய வைக்கும் விஷயங்கள் காட்டி 
பயப்படவும் வைக்கும் பணிந்து – சுயத்தெளிவில் 
முன்னேறும் உள்ளமெலாம் முத்திபெறும் ஞானமே 
தன்னேரு மில்லாத் தலை! (17) 

தலையான சேவை தவமான ஞானம் 
நிலையான செல்வம் நிகழும் – அலைபோல் 
புதிதாய் முளைக்கும் புதிராகும், ஞானம் 
விதியின் பிறிதோர் விதம்! (18) 

விதவிதப் பாடும் விரித்ததை நாளும் 
பதம்பட நெஞ்சில் பதித்து – மதியடையும் 
செத்தை அகற்றிச் சரியாக்கும் ஞானமெ 
பத்திக் குகந்த பரம்! (19) 

பரமென்றும் விஞ்ஞானப் பார்வையென்றும் பல்லோர் 
முரன்படக் கூறும் முழுமை – அரணாகிக் 
காக்கும் அனுபவக் காட்சித் திரள்ஞானம் 
பூக்கும் மனத்திலோர் பூ! (20) 

பூவான நெஞ்சம் புயலாக மாறுங்கால் 
சாவாது காக்கும் சகனாகும்! – நோவாத 
நல்லறிவு கொண்டோர் நடத்திடும் வேள்வியெனப் 
பல்கிப் பெருகும் பலம்! (21) 

பலமென்ன கொண்ட பலவீனம் என்ன
நலமென்ன வாழும் நடப்பின் நிலையென்ன 
என்றெல்லாம் நாமே எழுந்துணர வைக்கின்ற 
குன்றின் விளக்கக் குறி (22) 

குறியின்றி வாழும் குறைவீழ, உண்மை 
நெறியின்றி சாகும் நிலையும் – செறிவாக 
ஞானம் துணையாகும் நாம்செயும் செய்கைக்கென் 
றான பயனின் அமைப்பு! (23)

அமைப்பதனால் ஞானம் அமைவதில்லை யாரும் 
சமைப்பதனால் வந்து ஜனித்து நமக்குள்ளே 
மாற்றம் கொடுப்பதில்லை மண்டைக்குள் மூளும்தீ 
ஏற்றம் கொடுக்கும் எழில் (24) 

எழிலெல்லாம் உள்ளத்தின் ஏற்பே கொடுமை 
நிழலெல்லாம் தோன்றும் நிழலே முழுமையென்ன 
ஆடும் மனத்தை அடக்கின் தெளிவாகக் 
கூடும் ஞானக் குவை! (25) 

குவைதந்தால் போற்றிக் கவிதந்தால் ஏனிப் 
புவிதந்து நின்று புகழ்ந்தால் – தவவலிமை 
நேரா தெனினும் நெறிநேர்மை பற்ற்றிவிட்டால் 
வாரா வரமும் வரும்! (26) 

வருவது போகும் வரமது போகும் 
வருமது மீண்டும் வழுக்கும் – இருப்பதாய்த் 
தெரிவன மங்கும் தெளிவுற்றால் ஞானம் 
தருவன யாவும் சுகம் (27) 

சுகமாகும் ஞானம் சுமையாகும் ஓர்ந்தார்க் 
ககமாகும் ஆடி அடங்கும் யுகமிதில் 
சேர்வாருக்குச் சேரும் செழிப்பாம் உளக்குளம் 
தூர்வார்க்கும் ஜோதித் துளி (28) 

துளியளவும் சந்தேகம் தோன்றா மனத்தே 
அளையாது ஞானம் அமையா- துளத்தினில் 
ஐயம் எழுங்கால் அதைத்தோண்டு! ஞானமெனும் 
வையத்தைப் பார்ப்போம் வளைந்து (29) 

வளைந்து கொடுத்து வளர்கின்ற நாணல் 
பிளக்கும் புயலும் பிழைக்கும் – திளைக்கின்ற 
ஞானமிதைப் போல நடுங்கா துயிருக்குள் 
வானம்போல் நிற்கும் வளர்ந்து (30)

-விவேக்பாரதி 

Comments

Popular Posts