நண்பன் வைத்தீஸ்வருக்குப் பிறந்தநாள்மலருக்குக் காம்பாக, தாம ரைகள்
    மலர்கின்ற நீராக, விடியும் காலைப்
புலர்வுக்குப் பனியாக, விடிந்த பின்னே
    புத்துணர்வு தருகின்ற ஞாயி றாக,
சிலநேரம் மனமாக, பலநே ரங்கள்
    சிறப்பான தோளாக எனக்கு வாய்க்க
உலகுக்குள் தான்தோன்றி நின்ற உன்னை
    உயிர்கொண்ட தமிழாலே வாழ்த்து கின்றேன்!


நீவேறு நான்வேறு பிரித்துப் பார்ப்பார்
    நிழல்வேறு குளிர்வேறு என்றா தோன்றும்?
பூவேறு மணம்வேறென் றாவ துண்டோ?
    புகழ்வேறு பணம்வேறு பிரித்தல் உண்டோ?
போய்வேறு திசைபுகுந்து கிடக்கும் போதும் 
   புத்தியிலே எனையென்றும் பிரியா நண்பா
நாவேறும் செந்தமிழின் கவிதை கொண்டு
    நல்லதொரு வாக்குடனே வாழ்த்து கின்றேன்!

கவியுள்ளம் அரியதுதான் ஆனால் இந்தக்
    கவியுள்ளம் சொல்கின்ற தெல்லாம் கேட்கும்
செவியுள்ள நண்பர்கள் அரிது கண்டாய்
    சேர்ந்தாய்நீ அவ்வாறு வரமாய் வந்தாய்!
தவமென்று தமிழ்க்கவிதை பாடும் நேரம்
    தட்டாமல் கொட்டாமல் நீ ரசிப்பாய்!
தவறென்றும் தள்ளென்றும் சொல்வார்க் கூடே
    தமிழ்கேட்கும் நின்னையான் வாழ்த்து கின்றேன்!

வெண்பாக்கள் செய்யுட்கள் பழக்க மில்லை
    வெறும்வீச்சுக் கவிதைகள் படித்த தில்லை
கண்பார்த்த பின்பாட்டாய்க் கவிதை யாக
    கழற்றிவிடும் பழக்கமெல்லாம் உனக்கும் இல்லை
பெண்பார்த்து சூழ்கின்ற அழகைப் பார்த்துப்
    பெருவியப்பு கொண்டதுபோல் மொழிந்த தில்லை
நண்பாநீ என்நெஞ்சத் தடத்தைப் பார்த்து
    நல்லதொரு ராஜாங்கம் நிறுவிக் கொண்டாய்!

தூணானாய் எனைத்தாங்கித் தோள்கள் தந்தாய்
    துன்பங்கள் இன்பங்கள் சேர்த்தே தந்தாய்
ஆணான தாயானாய் தந்தை ஆனாய்
    அண்ணன்மார் தம்பியெலாம் நீயே ஆனாய்
வீணிந்த நட்பென்று பல்லோர் ஏசும்
    வேளையிலும் என்கைகள் இணைத்தி ருந்தாய்
காணிந்த காற்றிருக்கும் வரைநம் நட்பு
    கரையாத கற்பூரம் கவித்தீ ஏந்தும்!

பல்லாண்டு நீவாழ்க மனம்போல் வாழ்க்கை
    படைக்கின்ற திறனுன்றன் வசத்தில் சேர்க!
நல்லார்கள் தாம்சூழ நலமாய் வாழ்க
    நாடகங்கள் வேடங்கள் தொடரும் போதும்
எல்லார்க்கும் எளியோனாய் இனிய நெஞ்சம்
    எப்போதும் கொள்பவனாய் நிலைத்து வாழ்க
வில்லார்க்கு வளைந்தாலும் விசையும் கொள்ளும்!
    வித்தகனே உனையொருநாள் உலகம் சொல்லும்!!

விவேக்பாரதி
12.12.2018

Comments

பிரபலமான பதிவுகள்