இன்ப நிலாவே


 இன்னும்விலக வில்லைஎன்ன இன்ப நிலாவே! - நீ
   இரவில்நீட்டும் சேதிஎன்ன இன்ப நிலாவே?
மின்னுகின்ற ஒளியணுக்குள் இன்ப நிலாவே - நான்
   மீட்டுகின்ற கவிதைவாங்கு இன்ப நிலாவே!

முகிலினத்தின் பெருவிரிப்பில் இன்ப நிலாவே - நம்
   முயற்சியாவும் தோன்றுமென்று சொல்லு நிலாவே
அகவெளிக்குள் அண்டதுண்டம் இன்ப நிலாவே - வந்
   தவதரிக்கும் என்றும்சொல்லு இன்ப நிலாவே
சுகநினைப்பில் ஒலித்தெரிப்பில் இன்ப நிலாவே - உன்
    சுருதிகேட்டு பாடவந்தேன் இன்ப நிலாவே
மிகப்பொருத்தம் உன்றன்மௌனம் இன்ப நிலாவே - நெஞ்சில்
    மின்னலான கவிதைகேளு இன்ப நிலாவே!

எனைப்படைத்தும் உனைப்படைத்தும் ஒருவன் ஆடுவான் - அவன்
   எழுதுகின்ற காட்சிக்குள்ளே நாமும் வாழுவோம்
மனம்படைத்து மதிபடைத்துச் சண்டை மூட்டுவான் - அதில்
   மாறிமாறி தேறிநாறி நாமும் வீழுவோம்
சினம்படைத்த காரணத்தில் மனிதர் வாடுவார் - அதன்
   சீற்றம்நீக்க மாற்றமாக்கத் தவங்கள் செய்யுவோம்
இனம்படைத்த உங்களுக்குள் இவையும் இல்லையே - இன்னும்
    என்னசேதி சொல்லவந்தாய் இன்ப நிலாவே!!

-விவேக்பாரதி
20.12.2018

Comments

Popular Posts