வீர சுதந்திரம் கலைக்காட்சி

வீர சுதந்திர வேள்வியால் - வந்த
    வீணரை வென்று விரட்டிய - எங்கள்
பாரதரின் புகழ் கேட்கவே - இந்தப்
    பாரதி திருவிழா வாருங்கள்! - பல
காரணமான கதைகளும் - நல்ல
    காவியம் போன்ற வடிவுடன் - நன்கு
வேர்விட்டிருக்கிற ஆலென - இங்கு
    விரிந்து வளர்ந்ததைப் பாருங்கள்!


வாசலில் பாரதத் தாய்முகம் - உள்ளே
    வலிமையர் வீரர் அறிமுகம் - இந்தப்
பூசைக்குப் பூக்கொண்டு வாருங்கள் - தொழும்
    புண்ணியர் கூட்டத்தில் சேருங்கள் - தங்கள்
ஆசையென்றே நம் விடுதலை - தனை
    யாசித்த தியா உயிர்களின் - உயிர்
ஓசைகளாம் வந்தே மாதரம் - அதை
    உரக்க சொல்லியே வாருங்கள்!

கடலுக்குப் பக்கத்தில் மணிவிழா - அட
    கலைவாணர் அரங்கத் திருவிழா
உடலுக்குள் இந்தியர் என்கிற - வீர
    உதிரம் கொதிக்க வைக்கும்விழா - அலை
கடலென நீரிங்கு வாருங்கள் - நம்
    கடமை இதுவெனக் கூறுங்கள்! - பெரும்
வடமொன்று கையில் தருகிறோம் - தேர்
    வந்தது சேர்ந்திழுத் தாடுங்கள்!!

-விவேக்பாரதி
08.12.2018

Comments

Popular Posts