மனத்திடம் அறிவுரை

மனமே ஓ மனமே - நீ
   மருளுவதேன் தினமே?
கனவே வெறும் கனவே  - இந்தக் 
   காலம் சில கணமே!

காற்றினில் தீயை நாமெரித்தாலும்
    காற்றுக்கு வலிப்பதில்லை ,
கதிரவன் நிலவைச் சுடுவதென்றாலும்
    கவலைப் படுவதில்லை,
காற்றாய் நிலவாய் நாமிருந்தாலே
    காலம் கசப்பதில்லை,
கவனம் இகழ்ச்சி ஏமாற்றங்கள்
    காயம் கொடுப்பதில்லை!

நாமுண்டு நமக்கு பிறகென்ன கணக்கு
    நாளும் ஆனந்தம்!
நடித்திட வேண்டா நகர்ந்திட வேண்டா
    நடக்கும் ராஜாங்கம்!
வானுக்கு மேலே வெடிவெடித்தாலும்
    வானம் கிழிவதில்லை!
வழியினில் நூறு சரிவிருந்தாலும்
    வாழ்க்கை அழிவதில்லை!

வருவது கோடி பெறுவது கோடி
    வளையா திருந்துவிடு!
வாட்டம் வந்தாலும் ஓட்டம் விடாமல்
    வழியை நினைந்துவிடு!
தருவதும் ஒருவன் தலைமகன் இறைவன்
    தற்செயல் ஏதுமில்லை,
தானெனுன் நம்மை நாமழித்தாலே
    தர்க்கம் தொடர்வதில்லை!!

-விவேக்பாரதி
11.11.2018

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி