நான் வீதிப் பாடகன்

நான் வீதிப் பாடகன்
ஓர் வினையிலாதவன்
தேருலவும் வீதிகளின்
ஓரங்களில் வாழ்பவன்! 


காற்றோடு பாட்டாகிச் சூழ்கின்றவன்
நேற்றோடும் உறவின்றி போகின்றவன்!
நாளைகளை நினையாமல்
இன்றோடு வாழ்கின்றவன்....

மனமென்னும் குரங்கின் விளையாட்டில் மகிழ்ந்து
மலராகிச் சருகாகி வீழ்கின்றவன்!
தினமும் ஒரு கோலம் கணம்நூறு பாடல்
திரளாகித் துகளாகிப் போகின்றவன்!

இல்லாமை என்னிடம் இல்லையே
இழப்பதற் கெனதேதும் இல்லையே! (நான்)

ஆனந்த வாழ்க்கை அனுபவங்கள் சேர்க்கை
அகலாகிப் புகையாகும் என் நாட்களே
ஞானத்தின் வேட்கை நாள்தேடும் யாக்கை
நான்சொல்லும் பாடல்கள் யுகப் பூக்களே!

தீபத்தின் தியானத்தில் சந்நிதி
திரியாக நான்வாழும் நிம்மதி! (நான்)

என்னோடு வானம் என்மீது மீன்கள்
என்மூச்சு புயல் காற்று கவிதை அலைகள்!
மின்னோடு நெஞ்சம் உரசாதிருந்தால்
மிளிராது நான்பாடும் சொல்லின் மலைகள்!

யாருக்கும் நான்பாடவில்லையே
பாடமால் என் வாழ்க்கை இல்லையே! (நான்)

-விவேக்பாரதி
24/11/2018

பாடல்

 

Comments

பிரபலமான பதிவுகள்