அம்பலத்தாடும் ஆதிசிவன்

 

அம்பலத் தாடும் ஆதி சிவனின்
அடிமை ஆனோமே,
கும்பிட்டுக் குறையின் மலைகள் கடந்து
கோவில் ஆனோமே!
நம்புதல் என்னும் வேத வழியை
நாம் தொடர்ந்தோமே!
தம்பட்டம் இன்றி இறைவன் பாதம்
தமையுங் கண்டோமே!

நமக்குள் அவனே நடிப்ப தென்னும்
நாடகத்தை உணர்ந்த பின்னும்
நமது நமதென ஆடும் நிலையென்ன?
நல்ல ஒளி முன் இருளின் குளிரென்ன?

சுமக்கும் இறைவன் சுடரும் தலைவன்
சூட்சுமங்கள் அவிழ்க்கும் ஒருவன்
தமது தாளைச் சரண் புகுந்தாலே
தர்க்கம் இல்லை இந்த மண்மேலே!

தீயின் விழி முன் தீப நெஞ்சின்
தீயை யெரித்து திசையை விரித்து
வாயில் காற்றாய் வாழ்ந்திருந்தாலே
வாட்டும் காயம் நீங்கும் தன்னாலே!

தாயின் மனமாய்த் தலைவன் வருவான்
தமிழை அருள்வான் தரணி வளர்ப்பான்
காயும் மனத்தைக் கனிய வைப்பானே
கண்களுக்குள் தெளிவைத் தைப்பானே!

நந்தி யாக நெஞ்சை வைத்து
நமது தலைவன் ஏறும் நாளை
சிந்தை செய்து காத்திருந்தாலே
சிவனின் பாதம் பதியும் நம்மேலே

பந்தம் சிவமே சொந்தம் சிவனே
பாடம் சிவனே பாடல் சிவனே
முந்திப் பிந்தும் எண்ணம் சிவன் தானே
மூர்க்கம் அன்பு யாவும் அவன் தானே!!

-விவேக்பாரதி
20.12.2018

Comments

Popular Posts