தமிழ் ஏக்கம்

நண்பன் வெங்கடேசின் குறும்படப் படப்பிடிப்பு தொடர்பாக அண்ணா நகரில் ஓர் பேருந்து நிறுத்தத்தில் படப்பிடிப்பு நடத்தக் காவல்துறையிடம் உதவி கேட்கச் சென்றிருந்தோம். 

நாங்கள் வைணவக் கல்லூரி மாணவர்கள். சமீபத்தில் தான் வைணவக் கல்லூரி வாசலில் ஒருவர் ஒரு கும்பலால் சரமாரியான கத்தி குத்துகளுக்கு ஆளாகி இறந்த செய்தியை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கக் கூடும். அதனை ஒட்டிப் படப்பிடிப்பிற்கு அனுமதியும் கேட்டதால் எங்கள் கல்லூரியைச் சுற்றியிருந்த எந்தப் பேருந்து நிறுத்தங்களிலும் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. 

காலையில் படப்பிடிப்புக்குத் தேவையான சாதனங்களை வாடகைக்கு எடுத்துவிட்டு அனுமதி கிடைக்குமா என்று யோசித்துக் காத்துக்கொண்டிருந்த சமயம் நண்பன் ஒருவன் முன்னெடுப்பால் அண்ணா நகரில் ஐ.சி.எஃப் அருகில் இருக்கும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் படம்பிடித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதச் சொல்லி கேட்டார்கள். நான் தான் விண்ணப்பக் கடிதத்தை எழுதினேன். அனைவரும் பட்டாளமாக காவல் நிலையம் சென்றோம், நண்பர்கள் சிலர் மட்டும் உள்ளே சென்று அனுமதி வேண்டினார்கள்.

வெகுநேரம் கழித்து அனுமதி பெற்ற மகிழ்ச்சியுடன் வெளிவந்த நண்பர்கள் என்னை அழைத்துக் கை குலுக்கிப் பாராட்டினார்கள். "உன்னால தாண்டா இன்னைக்கு அனுமதியே கெடச்சது" என்று வேறு ஆனந்தப் பட்டார்கள். எனக்குத் தலையும் விளங்கவில்லை காலும் புரியவில்லை. நிறுத்தி நிதானமாகக் கேட்டதில், அனுமதி தருவதாகச் சொன்ன காவல் அதிகாரி நான் எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்திருக்கிறார். விஸ்காம் படிக்கும் மாணவர்கள் கொணர்ந்த கடிதம் தமிழில் இருந்ததே அவருக்குப் பெரும் ஆச்சர்யமாக இருந்திருக்கிறது. அத்தோடில்லாமல் அனுப்புநர் பெயரில் "வெங்கடேசுவரன்" என்று நான் எழுதியிருந்தமையைக் கண்டு "யாரிந்த கடிதத்தை எழுதியது?" என்று வினவியிருக்கிறார். "எங்கள் நண்பர்களுள் ஒருவன் தான், கவிஞன் ஸார் அவன்" என்று தயங்கியபடியே நண்பர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். அவர் மிகுந்த முகமலர்ச்சியோடு,

"வெங்கடேசுவரன் என்பத இப்டி தான் எழுதனும் சிலபேரு யோசிக்காம வெங்கடேஸ்வரன், வெங்கடேஷ்வரன் என்றெல்லாம் கிரந்த எழுத்தெ பயன்படுத்தி எழுதுறாங்க. இது தான் சரி." என்று கூறி, உடனே அனுமதியும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். நண்பர்கள் இதனை ஆனந்தத்தோடு என்னிடம் பகிர்ந்து கொண்டதும் நல்ல தமிழைக் கண்டு அவரது முகத்தில் ஏற்பட்ட ஆனந்தம் அளவிடற்கரியது என்று பாராட்டியதும் எனக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் என் முதல் சிறகு கவிதைத் தொகுப்பில் எழுதி இருந்த "தமிழ் ஏக்கம்" என்ற கவிதையை நினைவுப் படுத்தியது.

தமிழ் ஏக்கம் தீர்ந்து இனியேனும் ஊக்கம் ஆக்கம் எல்லாம் விளையட்டும்.
Comments

Popular Posts