என்னமோ ஒரு கவிதைஎழுதிக் கசக்கிப் போட்ட
எத்தனையோ காகிதத்துள்
ஏகாந்தமாய்க் கவிதை
இன்னும் சிரிக்கிறது! 


பழுது! பிதற்றல்
உளறலென நினைத்ததெல்லாம்
பல் காட்டிச் சிரிக்கையிலே
பத்து மின்னல் துளிர்க்கிறது! 


ஈரம் குறையாத
ஏதோ ஒரு கவிதை,
இதய முலாம் பூசி
எழுதி வைத்த சுவடொன்று,
காலைப் பனிபோல
கரைந்து நினைவுவிட்டு
எட்டி மிகத்தொலைந்த
எப்போதோ வந்த ஒன்று

பழைய குப்பைகளைக்
கிளறிப் பார்க்கையிலே
கொழுந்து முகம் காட்டிக்
கொக்கரித்துச் சிரிக்கிறது!
இளமை, எக்காளம், ஏக்கம்
துள்ளல், காதல், தேடல்
எத்தனை தலைப்புகள்
எத்தனை பார்வைகள்
எப்படிப் பொருத்தினாலும்
நிற்கும் சொற்கள்!

ஓ! என் மழலை இதயத்தின்
மறு ஒலிபரப்பாய்
நான் வடித்த கவிதைகள்
நாலா புறத்தினிலும்!
பார்த்த மயக்கம் அறப்
படிக்க உள் குதித்தால்
தோணாத மன வெளிகள்
அதிலே தொலைந்த என் வழிகள்!!

-விவேக்பாரதி
18.01.2019

Comments

Popular Posts