கவிமாமணி க ரவி அவர்களுக்குப் பிறந்தநாள்கவிதையைக் கொண்டாடும் கவிதைக்குப் பிறந்தநாள்
கவிஞரின் கவிஞரைக் காலம்தந்த இனியநாள்
தவமெனத் தமிழ்க்கவி தருகின்ற இனியரைத்
தாய்தந்த வரமாக யாம்கொண்ட புதியநாள்! 


ஆம்!
கவிஞரின் கவிஞர்க்குப் பிறந்தநாள்!

கிட்டாத உயரத்தைச் சொல்லென்னும் ரதமேறி
முட்டாமல் தொட்டுவரும் புதியவர்! எளிய
மெட்டாகிலும் சந்தச் சொட்டாகிலும் கவிதை
தட்டாமல் சொறிகின்ற மழையிவர்!

கவியென்னும் குதிரையில் செவியென்னும் நாட்டிடைக்
கனிவாய் வலம்வரும் அதிசயர்! இந்தப்
புவியின்பப் பூ!அதில் தேன்மாந்து நமக்கெலாம்
புளகாங்கி தத்துடன் தருபவர்!

ஆம்!
 கவிஞரின் கவிஞர்க்குப் பிறந்தநாள்!

பாடலும் தேடலும் ஓடலும் வாழ்க்கையாய்ப்
பவனிகள் செய்கின்ற வலியவர்! பக்தி
நாடலில் கூடலில் பாடலில் உண்டென்று
நாள்தோறும் எண்ணிடும் இனியவர்!

நேர்மையர் எதனிலும் நேர்த்தியை எண்ணிடும்
நேரத்தைப் போற்றிடும் அரியவர்! மதிக்
கூர்மையும் மனதிலே நேசமும் சொந்தமாக்
குணமெனத் தாங்கிடும் ரவியிவர்!

ஆம்
கவிஞரின் கவிஞர்க்குப் பிறந்தநாள்!

எப்போதும் உற்சாகம் எழிலான கலைத்தாகம்
எரிதழல் பார்வைகள் கொண்டவர்! உழைக்கத்
தப்பாத நெஞ்சினர் தண்ணீரைப் போலெதையும்
தண்மையோ டேற்கத் தெரிந்த்வர்!

நிற்காத உலகத்தில் நீடுபுக ழோடிவர்
நிறைவாகப் பல்லாண்டு வாழியே! அழகுச்
சொற்காவலர் நல்ல கவியார்வலர் எங்கள்
சொந்தமாய் வந்தரவி வாழியே!!

அன்பன்
விவேக்பாரதி
13.01.2019

Comments

பிரபலமான பதிவுகள்