மன நாடகம்

Image credits
Creator:Ed Swarez
Copyright:© Swarez Modern Art Ltd. 2014. No unauthorized usage permitted.

சொகுசான நீள வாட்டில்
சொக்கிக் கிடக்கிறது மனம்!

சூளுரைத்த செய்திகள்,
படித்த வசனங்கள்,
பதிவான தத்துவங்கள்,
யாவும் ஓரம் நிற்க
சொகுசான நீள வாட்டில்
சொக்கிக் கிடக்கிறது மனம்!

உள்ளே கிளை பரப்பி
வேர்விட்டிருக்கும்
பகுத்தறிவு ஆல மரத்தில்
அழகிய ஊஞ்சல் ஒன்றையும் கட்டி
நீள வாட்டில் படுத்திருக்கிறது
இந்த மனம்!

"யாராண்டா என்னடா?" என்று
போராட்டமில்லா நிலையில்
கண்ணயர்ந்து துயில்கிறது!
ஒரு மனம் அதனை எழுப்ப முயல்கிறது!
ஒரு மனம் அதற்கு மசியாமல்
அப்படியே புரளுகிறது!

ஆசை மனம் எல்லாவற்றையும்
ஏக்கத்தோடு பார்க்க,
மீசை மனம் நிலையாமை சொல்லி
தாடி தடவுகிறது!
கோப மனம் எரிச்சலோடு
கொந்தளித்து நிற்க
சபல மனம் சந்தேகத்தில்
குளிர் காய்கிறது!

சத்த மனம் இசையென்று
கூச்சல் போட்டிருக்க
மௌன மனம் ஏமாந்து
காதடைத்துக் கொள்கிறது!
பித்து மனம் சிரித்துக் கொண்டே
ஞான மனத்தைத் துறத்துகிறது!

எல்லாம் பார்த்த ஞான மனம்
அதே சொகுசான நீள வாட்டில்
சொக்கிக் கிடக்கிறது!!

-விவேக்பாரதி
05.01.2018

Comments

Popular Posts