சுகமான பிரதோஷம்
மலர்சூழ உன்னையான் கண்டதும் - என்றன்
மனமெங்கும் உன்பாதம் வந்ததும் - கோடி
புலர்காலை சூரியன் ஒளியினை - மின்னும்
புன்னகையில் நீகாட்டி நின்றதும் - கொஞ்சும்
நிலவோடு சதிதேவி கங்கையும் - உன்றன்
நிழலோடு தெரிகின்ற தோற்றமும் - என்றன்
கலகங்களைப் போக்க வந்ததே - அந்தக்
கணமிந்த பிரதோஷம் என்றதே!
காளைமீ துன்னுலா பார்த்ததும் - நெஞ்சம்
கசிந்திடக் கண்பொங்கு கின்றதே! - மாலை
தோளின்மீ தேநின்று ஆடிட - என்றன்
துன்பமிது போலாடும் என்றதே! - தூசு
தாளினின்றே காற்றில் சேர்ந்திடச் - சேரும்
தடைபோகும் தூளாக வென்றதே! - ஆதி
காளனே உமைபாதி ரூபனே! - உன்னைக்
காணவே பிரதோஷம் வந்ததே!
விழியொன்று நெருப்பாகிச் சுட்டதே - மற்றை
விழிரெண்டு நெஞ்சத்தைத் தொட்டதே - என்றன்
வழியாவும் ஒளியாய் நிறைந்ததே - ஞான
வாசலின் மலர்வாசம் வந்ததே! - கர்வம்
இழிவாகி உடனே அழிந்ததே - வாழி
ஈசா எனக்கவிதை நின்றதே! - இன்னும்
மொழியாலே நான்மாலை சாற்றவே - இன்று
முழுதான பிரதோஷம் வந்ததே!
"அப்பனே திரிசூல நாதனே - எங்கள்
அண்டத்தை அடைகாத்த வேதனே - ஞானச்
சுப்பனின் முன்வந்த சீடனே - சாம்பற்
சுடலையைப் பூசிடும் வேடனே! - தமிழைச்
செப்பிடும் தேவனே ஈசனே - போற்றி
சொல்லுவார் தம்நெஞ்ச வாசனே - நீறை
அப்பிடும் அடியாரின் அன்பனே - பாதி
அம்பிகைக் கிடம்தந்த பண்பனே!
வல்லனே வில்லாதி வில்லனே" - என்று
விதவிதப் பாவூறி நின்றதே! - சொல்லும்
சொல்லெலாம் எமையாளும் ஈசனின் - தெய்வச்
சொல்லென்று திருவாழ்த்து சொன்னதே - வாழ்வில்
அல்லலே இல்லாமல் போனதே - எங்கும்
ஆனந்தம் ஆனந்தம் நின்றதே - அதனைச்
சொல்லவும் சொல்கொண்டு செல்லவும் - இந்த
சுகமான பிரதோஷம் வந்ததே!!
படம் : Parameshwaran Hariharan படம்பிடித்த கபாலீஸ்வரர்
-விவேக்பாரதி
18.01.2019
Comments
Post a Comment