ஸ்ரீவத்ஸுக்குப் பிறந்தநாள்


புன்னகைக் கின்று பிறந்தநாள் - செல்வப்
   பூமகனுக் கின்று பிறந்தநாள்
பொன்னகைக் கின்று பிறந்தநாள் - எங்கள்
   பொக்கிஷத் துக்கின்று பிறந்தநாள்
சின்னவனுக் கின்று பிறந்தநாள் - ஒளிச்
   சிறப்புடை யோனுக்குப் பிறந்தாள்
மன்னவ னுக்கின்று பிறந்தநாள் - எங்கள்
   மாணிக்கத் துக்கின்று பிறந்தநாள்!

சேட்டைகள் செய்கின்ற சின்னவன் - இவன்
   செம்மையாய் இசைபாடும் மன்னவன்
வேட்கைகள் கொண்டதோர் நெஞ்சினன் - என்னை
   வெல்லவே மண்வந்த அன்பினன்
ஆட்களைக் கவரத் தெரிந்தவன் - தன்
   ஆற்றலை நன்றாய் அறிந்தவன்
நாட்களில் மட்டுமே இளையவன் - அன்றி
   நான் தொழும் அறிவினில் மூத்தவன்!

புகழை விரும்பாத புதியவன் - என்றும்
   புத்தியை மாற்றாத புயலிவன்
இகழையும் வெறுக்கின்ற இனியவன் - தோல்வி
   இவன்வசம் இல்லையென் றுரைப்பவன்
மிகவும் களிப்போடு வாழியே - இன்னும்    
   வெற்றியின் மாலைகொண் டாழ்கவே
சுகமும் நலம்யாவும் சூழ்கவே - என்றும்
   சுறுசுறுப்பைப் பெற்று வாழ்கவே!!-விவேக்பாரதி
25.01.2019

Comments

பிரபலமான பதிவுகள்