நன்றி சொல்வோம் - பைந்தமிழ்ச்சோலை கவியரங்கம்

 


வாழ்த்து

தென்றலென உள்நுழைந்து தேன்கவிதை மின்வளர்த்து
மன்றிலெனைப் பாடவைத்த மாத்தமிழே என்நன்றி!
உள்ளிருந்தென் பாட்டுகளை ஊக்கமுறச் செய்தளிக்கும்
நள்ளிரவுக் குழலழகி காளிக்கும் என்நன்றி!
முன்னவர்கள் வீற்றிருக்கும் முத்தான இவ்வவையில்
என்றனையும் முன்னழைத்த எந்தலைவர்க் கென்நன்றி!
நன்றிசொல்ல வந்தவர்க்கும் நற்றமிழ மக்களுக்கும்
கன்றுகவித் துள்ளலுடன் கவிழ்க்கின்றேன் என்நன்றி!

தலைவர் வணக்கம் - கவிஞர் சுந்தரராசன்

முண்டாசுக் கவிதந்த முத்தமிழின் சாற்றினையே
கொண்டாடி வாழ்கின்ற கொஞ்சுதமிழ்க் கவிவாணா!
சொல்லாலே நீயுதிர்க்கும் சுந்தரமாம் பாட்டுகளைக்
கல்லாதார் பூமியிலே கண்ணிருந்தும் என்னபயன்?
பசுமைநிறை யும்கவிதைப் பாய்ச்சலதைக் கேளாதார்
அசைகின்ற இவ்வுலகில் ஆடுவதால் என்னபயன்?
சுந்தரரா சன்தலைமை சுவைமிகுந்த மன்றமிதில்
வந்தனைகள் தமக்கிட்டு வாக்குரைக்க முந்துகின்றேன்!

பச்சைக் குழந்தையிவன் பைந்தமிழ்ச்சோ லைமன்றில்
கொச்சைவாய்ப் பாட்டுரைப்பேன் கொஞ்சம் பொறுப்பீரே!

நன்றி சொல்வோம் 

நன்றி சொல்லத் தெரிஞ்சிக்க வேணும் - ஏடா தம்பி
நல்ல மனச புரிஞ்சிக்க வேணும்

எதிர்பாரா நேரத்துல ஏதோவொரு ஓரத்துல
ஒதவிசெய்ய வருபவங்க உண்மையில தெய்வந்தாங்க!

பசியின்னு நெனைக்கையிலெ டீக்கடையில் நட்பப் பார்த்தா
பாடம் புரியாம தவிக்கையில ஒதவும் ஆத்தா
ருசியாக் கடல வறுக்கும் மூலக்கட கெழவி ஒன்னு
ராட்டிணம் சுத்தலாட்டம் சுத்தவைக்கும் மாமம் பொன்னு

எல்லாரும் நன்றி கேட்டு ஒழைப்பதுமில்லே
எல்லார்க்கும் நன்றி சொன்னா இழப்பெதுமில்லே!

பரிட்ச நேரத்துல சைக பதில் சொல்லும் நண்பன்
படம் பார்த்த ராத்திரியில் ஆட்டோ ஓட்டும் ஆட்டோக் காரன்
சிரிச்சே ஓட்டலுல சோறுதரும் அண்ணாச்சிங்க
சிந்தாம செதறாம உயிர்காக்கும் ஆம்புலன்ஸு

எல்லாரும் நன்றி கேட்டு ஒழைப்பதுமில்லே
எல்லார்க்கும் நன்றி சொன்னா இழப்பெதுமில்லே!

தென்ன மரத்தப் போல பயனால நன்றி சொல்லு
தேன் தமிழ் நம்ம பாட்டி ஔவயாச்சி சொன்ன சொல்லு
சொன்ன நன்றியத்தான் மறக்காம நீயும் நில்லு
சொன்னவரு வள்ளுவரு! அவருக்கும் நன்றி சொல்லு!

நன்றி சொல்லச் சொல்லச் ஒறவுங்க வளரும்
நட்பால காதலால ஒலகமே மலரும்!!

-விவேக்பாரதி
24.02.2019

Comments

Popular Posts