வேதனைக் கிளிக்கண்ணி
![]() |
https://www.deviantart.com/toonzy/art |
ஞான மரக்கிளையில்
நன்றாய் அமர்ந்தபடி
வானம் ரசிப்பாயடி - கிளியே
வேதனை நீகேளடி!
வந்தாரை வாழவைத்து
விருந்தோம்பும் தமிழ்நாட்டில்
சிந்தனை திரிந்தாரடி - கிளியே
சிறப்பை இழந்தாரடி!
வாரீரென் றுபசரித்தோர்
வாழ்ந்த தமிழ்ச்சமுகம்
சீரினை மறந்தாரடி - கிளியே
சீ!என நினைப்பாயடி! (ஞான)
அன்புக் கரம்நீட்டி
ஆதரித்த தமிழரெலாம்
வம்புக்குள் வீழ்ந்தாரடி - கிளியே
வளமை துறந்தாரடி!
போருக்கும் நீதிசெய்து
பொலிந்த தமிழரிங்கு
நேருக்கு மாறாகினார் - கிளியே
நீயிதைச் சிரிப்பாயடி! (ஞான)
வந்த கதைமறந்து
வாலாட்டி விளம்பரம்பால்
மந்தையென் றலைந்தாரடி - கிளியே
மானமும் களைந்தாரடி!
மெய்ப்பொருள் அறிவதெனும்
மேனிலை தான்மறந்து
பொய்ப்பொருள் பிடித்தாரடி - கிளியே
பொழுதுக்கும் துடிப்பாரடி! (ஞான)
கண்ணிரண்டையும் மூடி
காட்சியில் குற்றமென்று
புண்களை மொழிவாரடி - கிளியே
பூ!எனச் சிரிப்பாயடி!
நன்றெது தீதெது
நாடறியும்! பிரிவை
வென்றுநாம் உயர்வோமடி - கிளியே
வாய்மையை மறவாதேடி!! (ஞான)
-விவேக்பாரதி
27.01.2019
27.01.2019
Comments
Post a Comment