மயில் தோகை மூட்டை


சோர்வதென்ப(து) அறியாத கண்கள் வேண்டும்! 
   சுறுசுறுப்பாய் இருக்கின்ற முறுவல் வேண்டும்!
சேர்கின்ற பணியென்னைச் சூழ்ந்த போதும் 
   செய்செய்செய் எனமுடுக்கும் இதழ்கள் வேண்டும்! 
கார்மேகம் சூல்கொள்ளக் குளிர்ந்த காற்று 
   காதலுடன் தீண்டுதலைப் போலே என்னை 
ஆர்வமெழத் தீண்டியென்றன் வேலைக் கெல்லாம் 
   ஆதார மாய்வாழும் காதல் வேண்டும்! 

உடலலுத்த உடனேயே தூக்கம் வேண்டும்
   உயிர்சிலிர்க்க நாள்தோறும் கவிதை வேண்டும் 
கடனடைத்த பின்கையில் காசு வேண்டும்
   காதலுடன் தலைகோதும் கைகள் வேண்டும்
எடுத்தவினை வெற்றியிலே முடிய வேண்டும் 
   எக்குத்தப் பானாலும் படிப்பு வேண்டும்!
கொடுத்தவுடன் மறந்துவிடும் நெஞ்சம் வேண்டும்
   கோபத்தில் நியாயங்கள் உறும வேண்டும்

மங்குமிள நிலவொளியில் இரவில், யாரும் 
   விழிதிறவா வேளைதனில் தனியே, ஆசை 
பொங்கிவரும் நெஞ்சுடனே உழைக்கும் நேரம் 
   பூவிதழால் ஓர்முத்தம் என்மேல் சூட்டி 
தங்கிநிலை பெறுகின்ற உற்சா கத்தீ 
   தகதகத்த அணைக்கின்ற கரங்கள் வேண்டும்!
தங்கச்சிலை போலொருத்தி அருகி ருந்தால் 
   தரணிசுமை கூடமயில் தோகை மூட்டை!!

-விவேக்பாரதி
25.02.2019

Comments

Popular Posts