யாதிந்த முத்தம்?பேசுபொருள் நீயெனக்கு புத்தகத்திலிருந்து 

யாதிந்த முத்தம்? யாதிந்த முத்தம்?
    யார்சொல்லு வாரிந்த முத்தத்தின் மொத்தம்?
பூதந்து விண்ணோர் புரிகின்ற தொழிலா?
    பூமியமு தத்தனையும் சேர்க்கின்ற பொழிலா?


இதழ்கொஞ்சிப் பேச இருக்கின்ற மொழியா?
    இதயங்கள் இடம்மாற இதுவொற்றை வழியா?
கதவற்ற நாணம் கவிசொல்லும் நிலையா?
    காயங்கள் கலனாக வைக்கின்ற உலையா?

பல்லோடு பல்லும், நாவோடு நாவும்,
    பலசண்டை விளையாடல் செய்தே குலாவும்
சொல்லாடல் போகும்! உடல் மெளனம்ஆகும்!
    சொர்க்கத்தின் கதை நூறு மொழிபெயர்ப்பு ஆகும்!

தனிமையின் பொம்மை செய்திட்ட கோலம்!
    தரையோடு மழைமூலம் வான்பேசும் ஜாலம்!
மனதுக்குள் தெய்வம் குடியேறும் காலம்!
    மனிதர்க்குள் மிருகத்தின் நெடிவீசும் நேரம்!!

-விவேக்பாரதி

Comments

Popular Posts