வாயை மூடிப் பேசவும்...


சண்டைதான் நம்கடமை என்றெப் போதும்
    சாற்றுபவன் நானில்லை தவறு செய்தால்
தண்டனைகள் உண்டென்னும் உண்மை யைநான்
    தவறென்றே ஒருபோதும் சொல்வ தில்லை!
கண்டதொரு பின்னடைவால் இழப்பு நேர்ந்து
    கவலையுறும் நேரத்தில் அதனை வைத்துக்
கொண்டுதன தாதிக்கம் நிறுவப் பார்க்கும்
   கொள்கையிலாப் பேடிகளைச் சாடு கின்றேன்!

நாமெழுவோம் வாருங்கள் என்று வீர
    நல்லுரைகள் சொல்லுவது போரு கன்று
தாமெழுந்த முரண்களையும் பகையும் நீங்கித்
    தாய்நாட்டார் ஒருசிந்தை கொள்வ தற்கு!
ஆமெழுதல் என்பதெலாம் விழுதற் கில்லை
    அறிவுடையோர் அவசரத்தில் சாய்வ தில்லை!
தாமதமோ நழுவல்களே நமைத்தான் தாக்கும்
    தரணிநமைப் பார்க்கிறது! என்ன செய்வோம்?

உள்ளிருக்கும் பேதத்தைக் களைந்து விட்டு
   உயர்வான தேசபக்தி கொண்டு நின்றால்
முள்ளிருக்கும் வேலியென்ன, நாட்டுக் குள்ளே
    முளைத்திருப்பார் வீதியிலும் ராணு வர்கள்!
தள்ளியுடன் நகர்ந்திடலாம் ஆகா தென்றால்,
    தரமான தோள்தரலாம் தொண்டன் என்றால்
எள்ளிநகை செய்திடுதல் அதனால் புத்தி
    ஏறியவன் எனக்காட்டல் மடமை காண்க!

எதிர்கருத்தோ பதில்பேச்சோ கூடா தென்று
    யாருக்கும் சொல்லிடவிங் குரிமை இல்லை
பொதுக்கருத்தை ஒப்புதலே ஒற்று மைக்குப்
    போதிக்கும் முதற்பாடம்! ஒன்றி வாழ்ந்து
புதுப்பகைமை செய்தவற்றை முதலில் மாற்றி
    புண்களின்மேல் மருந்துதரும் வரையி லேனும்
பதைபதைக்க வைக்காதீர்! தெரியா தென்றால்
    பக்குவமாய் வாய்மூடி இருத்தல் நன்றாம்!!

குழப்பத்துடன்
விவேக்பாரதி
28.02.2019

Comments

Popular Posts