சித்தார்த்தனாகும் புத்தன்கள் (கவிதைகள்) - நூல்நோக்கம்

மார்ச். 01, 2019 - 

போதிமரம், சித்தார்த்தன், புத்தன், ஞானம் இவற்றை அடித்துத் துவைத்துப் பிழிந்து சாயம் உலர்த்திப் போட்டிருக்கும் புத்தகம் “சித்தார்த்தனாகும் புத்தன்கள்”. ஏழெட்டு மாதங்கள் தவமாய்த் தவம் கிடந்து இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது என்றால் எத்தனை வெட்டல் ஒட்டல்களைக் கடந்து வந்திருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால் மற்ற புத்தகங்களைப் போல ஓரிரவில் கடந்து சென்றுவிட முடியாத அடர்த்தி பக்கத்திற்குப் பக்கம் வலுக்கிறது. இடையிலோ, தொடக்கத்திலேயோ, நிறைவிலோ நம்மை ஒருகணம் புத்தக வரிகளை மறந்து அகவரிக்குள் பயணப்பட வைக்கும் கவிதைகள். நான்கே நான்கு கதாப்பாத்திரங்களைக் குழந்தை விளையாடும் பொம்மை ராஜாங்கத்தைப் போல மாற்றிமாற்றி நண்பனாய், சேவகனாய், அரசனாய், அடிமையாய், கேள்வியாய், விடையாய் போட்டு உருட்டி எடுத்து நம்மையும் தன்னுடன் இழுத்துக்கொண்டே போகிறது இந்தப் புத்தகத்தின் மூலம் தான் பிறந்தாகச் சொல்லிக் கொள்ளும் “சிபு” என்கிற குழந்தை.

ஆரம்பத்திலேயே நம் அகத்தை வென்று விடுகிறார் சிபு,

“இந்தப் புத்தகத்தில் புத்தர் உட்பட மனிதர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை” மற்றும் “கற்பனைகளைத் தவிற மற்ற எதுவும் கற்பனைகள் அல்ல”

இந்த வரிகளே நம்மை அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் என்று படிக்கத் தூண்டுகிறது.

எடுத்த எடுப்பில் எடுப்பான அணிந்துரை வழங்கியிருக்கிறார் கார்த்திக் இமயவரம்பன் அவர்கள். கவிஞர் சிபுவிடன் மிக நெருக்கமாகப் பழகிக் கொண்டிருக்கும் அவர் சிபுவைக் குறித்து அளவிட்டுச் சொல்லியிருப்பவை யாவும் புத்தகத்தில் மறைமுகமாக அவர் முகம் பார்க்கத் தோதாக அமைகின்றன. வைரவரி வானரசன் அவர்களது நயவுரை நயம் மிகுந்த உரை. தன்னுடைய உரையாகக் கவிஞர் தான் சொல்லியிருப்பதையும் சொல்லவிருப்பதையும் காட்டுகிறார். இவையெல்லாம் எல்லாப் புத்தகத்திலும் இயல்புதான் என்றாலும் எல்லாப் புத்தகத்தை விட இதனை மாறுதலாகச் செய்ய வேண்டுமென்ற எத்தணம் வெற்றியைத்தான் சேர்த்திருக்கிறது. எதார்த்தமே இந்தக் கவிஞரின் உயிர்நாதமாக விளங்குகிறது என்பது மிகவும் பாராட்டவும் வரவேற்கவும் தக்கது. பொதுவாகவே “கவிதை விற்பனைப் பொருளன்று” இது அனைவரும் அறிந்த வாசகம். மேலும் கவிஞர்கள் விற்பனை உத்திகளில் விலைபோவதில்லை. ஆனாலும் விற்பனை உத்திகளைக் கவிஞர்கள், சிபு போல வளர்த்துக்கொள்ளலாம் என்று நான் எங்கும் நிறுவத் தயாராக உள்ளேன். அகம் சார்ந்த ஒரு பயணத்தை இந்தச் சமுதயத்திற்குத் தர நினைக்கும் சிபு, அதனை இந்தக் கால நவீன இலக்கிய வடிவத்திலும், அதிகப் படியான கவிதை உள்ளீட்டு ஜாலங்கள் இல்லாத நிலையிலும் படைத்திருப்பது மிகவும் பாராட்டுவதற்கும் பின்பற்றுவதற்கும் உரியது.

கவிதைக்குள், கதைக்குள், சரி கவிதைக் கதைக்குள் நுழைந்தால் முதலில் நாம் சந்திப்பது ஒரு செய்தியாளனை,

“செய்தியாளன்
ஆவதற்கு முதற்தகுதி
பிணங்களைக் கண்டு
அழக்கூடாது…

எரியும் உடலை
எக்காரணம் கொண்டும்
அணைக்கக் கூடாது…”

இவை சிபுவின் எதார்த்த அளவீட்டின் உச்சம் என்று கொள்ளலாம். படிப்படியாக செய்தியாளன் ஞானத்தையும் புத்தனையும் சித்தார்த்தனையும் போதி மரத்தையும் சந்திக்கிறான். அவற்றிடம் வழக்கமாகக் கேள்வி கேட்டு வாங்கிக் கொள்கிறான். திறனாய்வு அல்லது விமர்சனம் என்று இதனை நகர்த்திக் கொண்டு போவதற்கு முன்னம் ரசித்த பகுதிகளை வாசக ரசிகனாகச் சொல்லிவிடுவது என்று எனக்குத் தோணுகிறது. அதன்படி பார்த்தோமானால் சித்தார்த்தனாகும் புத்தன்கள் மொத்தமும் எதார்த்தத்தின் சிகரம். இந்த எதார்த்தத்தையும் கற்பனைக் கதையையும் வடதுருவ தென்துருவமாகக் கண்டுவந்த நம் சமுதாயத்திற்கு இவை இரண்டும் பக்கத்து வீட்டு அங்காளி பங்காளிகள் என்று காட்ட முயன்றிருக்கிறார் கவிஞர். என்னைப் பொறுத்தமட்டில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

“எனக்குத் தெரியும்
அந்தப் பூக்காரிக்குக்
கணவன் இல்லை…
எதற்கவளுக்கு
இத்துணைப் பெரிய பொட்டு?
பூக்கள் விற்கவா?”

இந்த வரிகள் நம்மை அந்தப் பூக்காரி அருகில் அமர வைக்காமல் செல்லா. சமுதாயம் சில நிலைகளில் சில வேஷங்களைச் சீருடையாக நம்பி ஏற்கின்றது. விபூதி பட்டை அடித்த முதல் பெஞ்ச் மாணவன், சிடுமூஞ்சி பேருந்து நடத்துநர் என்பது போல..

செய்தியாளன் ஞானம் என்கிற பொருளை, ஆளை, சக்தியை என்னவோ ஒன்றைத் தன் கண்களால் காண்கிறான். தன் பழக்க தோஷத்தில் அதற்கு முன்னமும் பேனாவை நீட்டிக் கேள்விகள் கேட்கத் தொடங்குகிறான்., அவன்,

“நீதான் புத்தனுக்குக் கிடைத்தாயா?” என்று கேட்க,

“நான் கிடைத்ததால்தான்
அவன் புத்தன்,
இல்லையேலவன்
சிறுவன் சித்தார்த்தன்”

என்று ஏளனமாக ஞானம் பதில் சொல்கிறது. இவ்விடம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதில் வியப்பொன்றும் இல்லை. பொதுவாக நாம் பொருட்களின் மீதும் தகுதிகளின் மீதும் பற்று கொள்கிறோம். சில சமயங்களில் அவற்றால் கர்வமும் கொள்கிறோம். நம் மனம் அதனால் ஆனந்தமும் திருப்தியும் அடைகிறது, இஃதொரு பக்கம் இருக்க, பொருட்களோ, தகுதிகளோ நம்மை என்ன நினைக்கும்? புத்தனை நான் அடைந்ததால் தான் அவன் புத்தன் ஆனான், இல்லையேல் அவன் சித்தார்த்தனாகவே இருந்திருப்பான் என்று ஞானம் சொல்வதாக இங்குக் காட்டப்பட்டிருக்கும் நிலை, நம் வாழ்வில் எதுவும் நிலையானது இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.

நான் முன்னம் குழம்பினேன், அல்லது குழப்பினேன் என்று வைத்துக்கொள்வோம். எது ஞானம்? சக்தியா? தகுதியா? ஆற்றலா? அடிப்படையா? ஆளா? பொருளா? மாயையா? குணமா? எத்தனை கேள்விகள்! இதற்கு விடையைக் குழப்பி விட்ட சிபுவிடமே கேட்கலாம் என்று பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்.

“உன்னைக் கிழித்து
உன்னையே தைக்க,
உன் கையிலுள்ள
கத்திரிக்கோலும், ஊசி நூலும்
தான் ஞானம்”

உலகியல் என்பது நம் யாவருக்கும் அனுக்கமான ஒரு புள்ளி தான். அது நம்மால் கற்பனை செய்யப் படவேண்டியது அன்று. கண்ணால் கண்டுகொள்ளத் தக்கது. அப்படிப்பட்ட உலகியல் இந்தப் புத்தகத்தில் நிரம்பிக் கிடக்கின்றது. தற்போதைய சமுதாயத்தின் இருள் பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கவிஞரின் சொற்களில் அம்பலமாகின்றன.

“போதிமரமெங்கே?
யார் வீட்டுக் கொட்டகையில்
கரையான் அரித்துக் கிடக்கிறது?”

“இராஜகுமாரனுக்கு
மட்டும் தான்
உன் ஞானக் கீற்றில்
கூரை போடுவாயா?

சொல்

முதலில் நீ
எந்தக் காக்கையின்
மலக்குடலிலிருந்து
சுகப்பிரசவமாய்க்
கபிலவஸ்துவில்
விழுந்து முளைத்தாய்
நினைவிருக்கிறதா?”

போன்றவை அந்த உலகியலின் எடுத்துக்காட்டுகள். கவிஞர் தத்துவம், அறிவியல், காதல், விரக்தி என்று எல்லா துறைகளையும் வம்புக்கிழுத்தபடியே இருக்கிறார். இவர் கதையில் போதிமரமே பாவம் மரம் வெட்டிப் பிழைக்கக் கையில் கோடரியோடு அலைகின்றது.

சிபுவின் எள்ளல் முழுக்கமுழுக்க சமுதாய நலத்தின் விழைவாக ஒலிக்கின்றது.

“வேண்டுமென்றால்
அரசு போதி மரங்களுக்கு
மேற்கூரை போடுங்கள்,

ஒருவேளை
ஏழைச் சித்தார்த்தன்கள்
தியானிக்க வரலாம்!”

இதைவிடச் சிறந்த துள்ளலும் எள்ளலும் கிடைக்குமா? வானம்பாடி காலத்துக் கவிஞர் தான் இங்கு வந்தாரோ என்றெண்ண வைக்கும் அற்புதமான வீச்சு.

“கிட்டுவதை எல்லாம்
புனிதமாகக்
கருதுங்கள், உங்களை
விட்டுச் சென்ற
அத்தனையும்
போதிமரம் தான்..”.

“பசியின்மையில்
சிந்திய சோற்றுப் பருக்கை
பசியில் போதிமரம்!

குளிருக்கு இதம்,
கருகும் விறகு
போதிமரம்..
விழுந்து
எழுந்திரு,
தாயின் அதட்டல்
போதிமரம்..
பிரம்பை நேசி,
பள்ளியே போதிமரம்.
துரோகம் சுவை,
தந்தவன் போதிமரம்,
நெரிசல்தான் மன்னித்துவிடு
மிதித்தவன் போதிமரம்,

இறங்கித் தேடு
உன் இன்னொரு பையை,
பயணம் போதிமரம்..

போதிமரங்கள், வெறும்
நிழலை மட்டும் தருவதில்லை,

சொட்டும் சூட்டையும்
சுறுக்கென்ற பாடத்தையும்
தரும்..”

கவிஞர் வரையறைகள் செய்வதில் வாழ்க்கையைக் கழிக்கிறார் போலும். கண் பார்க்கும் அனைத்தையும் வரையறுக்கிறார்.

“பூமியின் மேல்பக்கம்
தோண்டப்பட்ட
நுணுக்கமான
ஆழம்தாம், நம்வானம்..”

ஒருநாள் என் பராசக்தி அந்தாதியில் எழுதினேன்,

“அறிந்தவை யாவும் அரியதென் றேதான் அளத்திடுவார்!
அறிந்தவை ஏதும் அவறறி வில்லை அறிந்தவர்கள்
அறிந்தவை தம்மை அனுபவிப் பாரன்றி ஆள்நிறைந்தே
அறிந்தவை தோறும் அலட்டுகி லாரென தம்பிகையே! (50)”

இதனை மிகவும் எளிமையாக்கித் தர இயலும் என்றால் அது கவிஞர் சிபுவால் நிகழ்ந்திருக்கிறது.

“ஆழத்தில் இறங்கியவர்கள்
ஆசிரமத்துக்குத்
திரும்பியதில்லை,
அவர்கள் ஆழமாகவே
ஆகிவிடுகிறார்கள்..”

அடுத்தென்ன சித்தார்த்தனைத் தேடுகிறான் செய்தியாளன். அவனைத் தேடும் தருவாயில் இவன் உதிர்த்துக்கொண்டே செல்லும் புலம்பல்களை உங்களுக்குச் சொல்லி வீணாக்க விரும்பவில்லை என்று கடந்தாலும்,

“இப்போது
எந்தக் குப்பைத் தொட்டிக்குள்
தொப்புள்கொடியில்
எறும்பு மொய்க்கத்
தியானம் செய்கிறாய்?”

என்ற இந்த வரிகள் என்னை கடக்க முடியாமல் நிறுத்துகின்றன. இளவரசன் சித்தார்த்தனை மட்டுமே பார்த்திருக்கும் நமக்கு இந்தக் கேள்விகள் எத்தனை சித்தார்த்தன்கள் உலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பயணித்துக்கொண்டும் படுத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

இதோ அதையும் கவிஞரே சொல்கிறார்,

“இன்று
எத்தனையோ
சித்தார்த்தன்கள்
இருக்கிறார்கள்,
ஒரு புத்தன்கூட
வெளிச்சத்திற்கு
வருவதில்லை.”

விட்டால் இப்படி வரிக்குவரி ரசனைக் குவியல்களைக் காட்டி நீங்கள் ரசிக்கவே வைக்கப்பட்டிருக்கும் சில பிரத்யேகமான இடங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை. மேற்படி சித்தார்த்தனாகும் புத்தன்கள் நூல் இந்தக் காலத்து நவீன கவிதை வடிவத்தில் எழுதப் பட்டிருப்பதும், கவித்துவ உள்ளீடுகள் என்று வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இருப்பதும் நான் முன்னமே சொன்னதைப் போல மிகவும் மெச்சி வியக்கத்தக்கது.

இலக்கண மரபைக் கழற்றிய ஒரு மனநிலையில் பயணிக்கும் உரைவீச்சுக் கவிதைகளுக்கும் இலக்கணம் என்பது கட்டாயமாகிறது. உரைவீச்சுக் கவிதைகளும் எழுதப்படுகிற மொழி தமிழ் என்பதனால் தமிழ் மொழிக்கே உரிய சில அடிப்படை இலக்கணங்களை இன்றைய நவீன கவிஞர்கள் தங்கள் மனத்துக்குள் ஆழப் பதித்தாக வேண்டும். காட்டாற்று வெள்ளமும் கண்களுக்கு அச்சம் கொடுத்தால் பயனில்லை தானே. அந்த வகையில் புத்தகம் முழுக்க கவிச்சுவையைப் போலவே எதார்த்தமாக நிரம்பிக் கிடக்கின்றன ஒற்றுப் பிழைகளும், புணர்ச்சிப் பிழைகளும். தற்போது கவிதை எழுதும் நவீன கவிஞர்களிடம் நான் கண்டு மிகவும் நொந்து போகும் இன்னொரு சகிக்கமுடியாத பிழை, ஒருமைப் பன்மை மயக்கம். “கனவுகள் வந்தது, காட்சி விரிந்தன” என்றெல்லாம் மாற்றிமாற்றி எழுதும் பாங்கு மிகவும் சகஜமாகிப் போய்விட்டது இந்த முகநூல் சூழ் உலகில். எனது இந்த வருத்தத்தை இவ்விடம் சொல்லக் காரணம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் புத்தகமும் தன் பங்கிற்கு ஒருமைப் பன்மையில் பெரிய மயக்கத்தைத் தந்துகொண்டுதான் இருக்கிறது.

கதைநோக்கமோ கற்பனை ஆற்றலோ எவ்விதச் சலனமும் இல்லாமல் இனியதொரு பிரவாகமாகத்தான் நடந்து நிறைகிறது. ஆனால் என்னைப் பொருத்தமட்டில் அதிகப்படியான எதார்த்தம் ரொம்பவே திகட்டச் செய்கின்றது. ஒருநாள்தான் வாழ்வு என்று தெரிந்திருந்தாலும் மலரை நாம் ரசிப்பதை நிறுத்துவதில்லை. கடந்தது மறையும் என்று தெரிந்திருந்தாலும் நாம் மணங்களை வெறுப்பதில்லை. நாளையே நிச்சயம் இல்லை என்ற வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் என்றாலும் அதற்காக நாளையைத் திட்டமிடாமல் நகர்வதில்லை. உலகியலின் எதார்த்தங்கள் என்பன எப்போதும் எல்லாராலும் உணர்ந்து அறியப்படுவன தாம். அவற்றை உணர்த்தும் முகத்தான் இந்த நூல் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும் எனக்கிது அதிகப்படியான பயத்தையும் தயக்கத்தையும் உருவாக்குகிறது என்பது திண்ணம். இந்தப் பயம் எனக்குப் புதியதல்ல, பட்டிணத்தாரின் பாடல்களைப் படித்தபோது எப்படியெல்லாம் நடுங்கினேனோ அவற்றைச் சித்தார்த்தனாகும் புத்தன்களும் எனக்குள் செய்கிறது என்பது, பல நூற்றாண்டுகள் தொடாமல் இருந்த பட்டிணத்தாரின் உணர்வுக் கடத்தலை இந்த வருடம் வெளியான ஒரு நூல் செய்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே எதார்த்தங்களின் பட்டியலால் இலேசான பயமும் என்னைப் பீடிக்கிறது.

ஆகமொத்தம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் உலகம் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம். கற்பனை, எதார்த்தம் இரண்டையும் எப்படியெல்லாம் இணைத்து, ஞான மார்க்கத்தில் கொண்டுசெல்ல முடியும் என்று ஏழெட்டு மாதங்கள் ரூம் போட்டு யோசித்திருக்கும் கவிஞர் சிபு வின் முயற்சி வானத்துக் கீழே வாழ்ந்து, வாசிக்கத் தெரிந்த அத்தனை உயிர்களுக்கும் ஒரு வரம்.

-விவேக்பாரதி 

Comments

Popular Posts