குரு காணிக்கை
குருவாக வந்தென்னைக் குவலயத் தோர்வாழ்த்தக்
குன்றின்மேல் வைத்த தவமே!
குறையோ டிருந்தவெனைக் குறியோ டியங்கிவரக்
கூர்மை கொடுத்த தயவே!
உருவாகி என்னைநான் வடிவாக்க வானத்தின்
உமையாள் அளித்த படியே!
உண்மையே உள்ளத்தின் வெண்மையே நெஞ்சத்தில்
உறுதியைத் தந்த நிதியே!
வரியா யிருந்தவெனை வளமான பாடலாய்
வாழ்விக்க வந்த கவியே
வள்ளலே மிகவாழ்ந்த உள்ளமே என்சொல்லில்
வளமை பயந்த தமிழே!
பரிவோடு நான்செல்லும் பாதைக்கு முதல்போட்ட
பாவலர் போற்றும் மணியே
பாடலே வாழ்க்கையென வாழ்கின்ற இச்சிறுவன்
பணியும் இலந்தை குருவே!
-விவேக்பாரதி
19.02.2019
19.02.2019
Comments
Post a Comment